Kerala: ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.. அரசு ஊழியர் நடனமாடிய போது உயிரிழப்பு
Onam celebrations Tragedy: கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின்போது, திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியர் ஜுனைஸ் அப்துல்லா மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

உயிரிழந்த ஜூனைஸ் அப்துல்லா
கேரளா, செப்டம்பர் 2: கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் போது அரசு ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே கேரளா முழுவதும் ஓணம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கேரள மாநில அரசின் தலைமைச் செயலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடனமாடும் நிகழ்வில் பங்கேற்றபோது அரசு ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த நபர் கேரள சட்டமன்றத்தில் துணை நூலகராகப் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் ஜுனைஸ் அப்துல்லா ஆகும். இவர் முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. அன்வரின் தனிச் செயலாளராக இருந்தவர்.
Also Read: புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி.. மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்தபோது நடந்த சம்பவம்!
மயங்கி விழுந்த அரசு ஊழியர்
നിലമ്പുർ എംഎൽഎയുടെ പി എ ആയിരുന്ന ജുനൈസ് നിയമ സഭയിൽ നടന്ന ഓണാഘോഷ പരിപാടിക്കിടെ കുഴഞ്ഞു വീണു മരിച്ചു.
നിയമ സഭയിൽ ഡെപ്യൂട്ടി ലൈബ്രേറിയൻ ആണ്.
ആദരാഞ്ജലികൾ 🌹🌹 pic.twitter.com/VT47ywS5iE— Tom Mathews Moolamattom (@TMoolamattom) September 1, 2025
தலைமைச் செயலக ஊழியர்களுக்கான ஓணம் கொண்டாட்டம் அங்குள்ள சங்கர நாராயணன் தம்பி மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது குழு நடனத்தில் ஜுனைஸ் அப்துல்லா பங்கேற்று உற்சாகமாக நடனமாடினார். அவர்களின் நடனத்தை அரங்கத்தில் இருந்த அனைவரும் ரசித்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். இப்படியான நிலையில் திடீரென ஜுனைஸ் அப்துல்லா கீழே விழுந்தார். ஆரம்பத்தில் அவர் ஒரு கால் இடறி விழுந்துவிட்டதாக அவருடன் நடனமாடியவர்கள் உணர்ந்து நிகழ்வை தொடர்ந்தனர். ஆனால் அவர் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு உடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை எழுப்ப முயன்றனர்.
ஆனால் பேச்சு மூச்சின்றி இருப்பதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக சற்றும் தாமதிக்காமல் ஜூனைஸ் அப்துல்லாவை சட்டமன்றத்தின் ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஜூனைஸ் அப்துல்லாவுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் சோகமடைந்து கண் கலங்கினர். இதற்கிடையில் அப்துல்லா மறைவு செய்தி அறிந்த தலைமைச் செயலக அதிகாரிகள் பிற ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர்.
Also Read: தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்.. குழந்தை பலி
ஜூனைஸ் கடந்த 14 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பணியாற்றி வந்தார்.பி.வி. அன்வர் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆனபோது, அவரது தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவராகவும் இருந்தார். தலைமைச் செயலக அலுவலகத்தின் விளையாட்டு மற்றும் கலை நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டி வந்த ஜூனைஸ் அப்துல்லா, சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர். அவர் சிறிது காலமாக இதய நோய்க்கான மருந்துகளையும் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனைஸ் அப்துல்லா உடலானது செவ்வாய்க்கிழமையான இன்று (செப்டம்பர் 2) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.