இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் விவோ முதலிடம்! ஜியோமி, சாம்சங் நிலை என்ன?
Top Smartphones in 2025 : 2025 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7% வீழ்ச்சியடைந்துள்ளது. பிராண்டட் போன்களின் விற்பனை குறைந்த நிலையில், விலையுயர்ந்த மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. விவோ பங்கு சந்தையில் 20 சதவிகித பங்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.

Top Smartphones In 2025
2025 ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை 7 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளதாக CyberMedia Research (CMR) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், ரூ. 25000க்கு மேல் விலையுயர்ந்த மற்றும் ரூ.7000 க்கு கீழ் விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் சிறிய வளர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ரூ. 7000 முதல் ரூ.25, 000 வரையிலான போன்கள் 6 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
5G ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிப்பு
2025 முதல் காலாண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 86 சதவிகிதம் அதிகம் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 13 சதவிகிதம் அதிகம். குறிப்பாக ரூ. 8,000 முதல் ரூ.13,000 வரையிலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 100 சதவிகிதமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட சைபர்மீடியா ரிசர்ச் என்ற அமைப்பை சேர்ந்த மீனா குமார் என்பவர் தெரிவித்ததாவது, 10,000 ரூபாய்க்கு கீழ் 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் விற்பனை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதை காட்டுகிறது. குறிப்பாக ஜியோமி, போகோ, மோட்ரோலோ மற்றும் ரியல்மி பிராண்டுகள் இந்த வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான வீழ்ச்சியில் ஷியோமி மற்றும் சம்சங் போன்கள்
சைபர் மீடியா ரிசர்ச், 2025 முதல் காலாண்டில் விவோ இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியிருக்கிறது. பங்கு சந்தையில் இந்த நிறுவனம் 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக விவோவின் Y29, T3 Lite, T3X, மற்றும் T4X போன்ற ஐந்து மாடல்கள் மொத்த 5ஜி போன்களின் விற்பனையில் 43 சதவிகிதமாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சம்சங் நிறுவனம் பங்கு சந்தையில் 18 சதவிகித வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. ஆனால் அதன் பிரபல ஸ்மார்ட்போன்களின் விற்பனை 13 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இதில் ஷியோமி மிகுந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்கு சந்தையில் அதன் பங்குகள் கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் குறைந்துள்ளது. அதன் ஸ்மார்ட்போன்களின் விற்பனை குறைவால் இத்தகைய சரிவை அந்நிறுவனம் சந்தித்திருக்கிறது.
மேலும் இந்த அறிக்கையின்படி, ஜியோமியின் 2ஜி மற்றும் 4ஜி போன்கள் விற்பனையில் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. 2ஜி மொபைல்கள் 17 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளன, அதே போல 4ஜி மொபைல்களும் 66 சதவிகிதம் குறைந்துள்ளன.
வருங்காலத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை எப்படி இருக்கும்?
இந்த அடிப்படையில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பயனர்களின் விருப்பங்களின் அடிப்படையில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்கின்றன. வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்பதால் சந்தையில் ஏற்கனவே இருக்கும் 2ஜி மற்றும் 4ஜி போன்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.