கண்ணுக்கே தெரியாமல் படமெடுக்கும் ரகசிய கேமராக்கள்.. கண்டுபிடிப்பது எப்படி?
Detect Hidden Camera | தற்போதைய சூழலில் உணவகங்கள், விடுதிகள், கழிவறைகள் என பொது இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டு பிளாக் மெயில் செய்வது, விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தற்போதைய சூழலில் தொழில்நுட்பம் (Technology) அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தால் அனைத்தும் சாத்தியம் என்ற நிலை தான் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ள நிலையில், சிலர் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால், அந்த நிகழ்விடத்தில் யாரேனும் இருந்தால் மட்டுமே அந்த நிகழ்வை காண முடியும். ஆனால், தற்போது அப்படி இல்லை. கேமராக்கள் (Camera) மூலம் ஒரு நிகழ்வை படம் பிடித்து அதனை எப்போது வேண்டுமானாலும் பார்க்கவும், பயன்படுத்தவும் முடியும்.
அறைகளில் பொருத்தப்படும் ரகசிய கேமராக்கள்
ஆனால் இந்த அம்சத்தை சிலர் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், உணவக விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிப்பது, வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க மொபைல் போன்கள் மூலம் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் லைட் பயன்படுத்தி கண்டுபிடிப்பது எப்படி?
- ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் லைட்டை பயன்படுத்தி நீங்கள் இருக்கும் அறையில் ரகசிய கேமரா உள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
- அதற்கு முதலில் நீங்கள் இருக்கும் அறையின் மின் விலக்குகளை அணைக்க வேண்டும்.
- பிறகு அந்த அறையில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கலாம் என நீங்கள் நினைக்கும் இடங்களில் பிளாஷ் லைட் அடித்து பாருங்கள்.
- அவ்வாறு செய்யும்போது உங்கள் மொபைல் போனில் ஃபிளாஷ் லைட் பட்டு ஏதேனும் ஒளி ரிஃப்ளக்ட் ஆகிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.
- ஒருவேளை நீங்கள் சந்தேகித்த இடத்தில் ஃபிளாஷ் ஆகிறது என்றால் அங்கு கேமரா இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
ஸ்மார்ட்போன் கேமரா பயன்படுத்தி கண்டுபிடிப்பது எப்படி?
- முதலில் நீங்கள் இருக்கும் அறையில் உள்ள மின் விலக்குகளை அணைக்க வேண்டும்.
- பிறகு ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து, அறையில் சந்தேகத்திற்கு உரிய இடங்களை சோதனை செய்து பாருங்கள்.
- அப்போது ஸ்மார்ட்போனின் கேமராவில் ஏதேனும் புள்ளி தெரிகிறதா என்பதை உண்ணிப்பாக கவனியுங்கள்.
- அவ்வாறு ஏதேனும் ஒளியை கண்டுபிடித்தீர்கள் என்றால் அங்கு கேமரா இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு முறைகளை பின்பற்றி மிக சுலபமாக நீங்கள் இருக்கும் அறையில் ரகசிய கேமரா உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.