சென்னையில் பணியின் போது தாக்கிய மின்சாரம்.. தூய்மை பணியாளர் பலி
சென்னை கண்ணகி நகர் பகுதியின் கனமழைக்கு நடுவே தூய்மைப் பணியில் ஈடுபட்ட வரலட்சுமி எனும் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மழைநீரில் மின் கேபிள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த வரலட்சுமி
சென்னை, ஆகஸ்ட் 23: சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் குப்பையை அகற்றும் பணியில் மழையையும் பொருட்படுத்தாது ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) மாலை 7 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய சென்னையின் பல்வேறு இடங்களிலும் கொட்டித் தீர்த்தது.
தூய்மை பணியாளர் மரணம்
இப்படியான நிலையில் இன்று அதிகாலை சென்னை கண்ணகி நகரில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுதல் மற்றும் மழை நீரை வெளியேற்றுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வரலட்சுமி என்ற பணியாளர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து இருந்த நிலையில் தெரியாமல் வரலட்சுமி அந்த தண்ணீரில் கால் வைத்துள்ளார்.
Also Read: குருவி கூட்டை எடுக்க சென்ற சிறுவன்.. மின்சாரம் தாக்கி பலியான சோகம்!
இதனால் தூக்கி எறியப்பட்ட அவர் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் வேலை பார்த்த சக தூய்மை பணியாளர்கள் விரைந்து சென்று வரலட்சுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கபட்டு மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Also Read: தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஆட்சியர்களுக்கு உத்தரவு.. தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் இழப்பீடு
இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் 13 நாட்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை அரசு அறிவித்தது. அதில் பணியில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் விரைந்து வரலட்சுமி குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.