மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் துவாரம் வழியாக தவறி விழுந்த பெண்.. 4 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்.. நடந்தது என்ன?
Chennai Crime: முதற்கட்ட விசாரணையின்படி, ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள பாழடைந்த அறையில் சுமார் ஒன்றரை அடி அளவிலான துவாரம் இருந்துள்ளது. அறை இருட்டாக இருந்ததால், அதைச் சரியாகக் கவனிக்காமல் விஜயா நிலைதடுமாறி துவாரம் வழியாகக் கீழ்தளத்தில் உள்ள அறைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 13, 2026: சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பராமரிப்பின்றி இருந்த அறையின் துவாரம் வழியாக கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன நான்கு நாட்களுக்குப் பிறகு, துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அவரது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் விஜயா (55). இவர் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்காகத் தனது மகள் காயத்ரியுடன் வேளச்சேரி–கடற்கரை செல்லும் பறக்கும் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
சம்பவத்தன்று நடந்தது என்ன?
அப்போது விஜயாவுக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என மகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
பின்னர், மகள் காயத்ரியை ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர வைத்துவிட்டு, இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக விஜயா அங்கிருந்த பாழடைந்த அறைக்குள் சென்றுள்ளார். அவர் அறைக்குள் சென்றதை மகள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!
நீண்ட நேரமாகியும் தாயார் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை மேற்கொண்டனர்.
4 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் கிடைத்த உடல்:
இந்நிலையில், நேற்று மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் உள்ள பாழடைந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே ஊழியர்களும் போலீசாரும் அறைக்குள் சென்று பார்த்தபோது, பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கடந்த 8ஆம் தேதி காணாமல் போன விஜயா என்பது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள பாழடைந்த அறையில் சுமார் ஒன்றரை அடி அளவிலான துவாரம் இருந்துள்ளது. அறை இருட்டாக இருந்ததால், அதைச் சரியாகக் கவனிக்காமல் விஜயா நிலைதடுமாறி துவாரம் வழியாகக் கீழ்தளத்தில் உள்ள அறைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!
இதையடுத்து, இந்த வழக்கை மயிலாப்பூர் போலீசார் திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெண்ணின் உயிரிழப்புக்கான சூழல் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பராமரிப்பின்றி இருந்த அறையில் ஏற்பட்ட இந்தச் சம்பவம், ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத பகுதிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.