அதிமுகவில் இணையும் தனுஷ்? – ராஜேந்திர பாலாஜி அளித்த விளக்கம்
Will Actor Dhanush Join AIADMK : நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைய முன்வந்தால், அவரை மனமுவந்து வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு தகவல்கள் உலவி வரும் நிலையில் அவரது கருத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி, அக்டோபர் 17 : நடிகர் தனுஷ் அதிமுகவில் (AIADMK) இணைய முன்வந்தால், அவரை மனமுவந்து வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு தகவல்கள் உலவி வரும் நிலையில், அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, அதனைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்தோ, தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : “தவெகவிற்கு வலுவான கட்டமைப்பு இல்லை, அது ஒரு ரசிகர் மன்றம் மட்டுமே”.. ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!




நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றங்கள்
இதற்கிடையே, அக்டோபர் 15, 2026 அன்று நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், இனி தனுஷ் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக’ செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நற்பணி இயக்கத்துக்கான கொடியும் லோகோவும் அந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. காரணம் முன்னதாக தற்போது முதல்வராக உள்ள விஜய்யும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி கொடியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். இந்த நிலையில் அந்த பாதையை முதல்வர் விஜய் தேர்ந்தெடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் தனுஷ்?
இந்த நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், தனுஷ் அதிமுகவில் இணைவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அதிமுகவுக்கு யார் வந்தாலும் அவர்களை அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு என்றார். கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படக்கூடிய எவரையும் அவர் இணைத்துக்கொள்வார் என்றும், இவர் வரலாம், அவர் வரக்கூடாது எனப் பிரித்துப் பார்க்கும் வழக்கம் அதிமுகவுக்கு இல்லை என்றும் கூறினார். கட்சிக்குப் பயனுள்ள நல்ல கருத்துகள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : மது பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம்! விற்பனை எப்போது?
தனுஷ் குறித்துப் பேசிய அவர், தற்போது இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக தனுஷ் இருப்பதாகக் குறிப்பிட்டார். முன்னணி நடிகரான அவர் அதிமுகவில் இணைந்தால், அவரை “இருகரம் கூப்பி வரவேற்போம்” என்றும் தெரிவித்தார். நடிகர்களின் அரசியல் வருகை குறித்துக் கருத்துத் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு நடிப்பைத் தொடரக் கூடாது என்றும் கூறினார்.
மேலும்”இன்று சிலர் படத்திலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள்” என அவர் விமர்சித்தார். தனுஷ் அதிமுகவில் இணைய விரும்புவதாக வெளியாகும் தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.