மாயமான 7 வயது சிறுமி.. 6-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை.. துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறல்!
7-Year-Old Girl Missing in Gingee: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றே 7 வயது சிறுமி மர்மமான முறையில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6வது நாளாக மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், எந்தவித துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
விழுப்புரம், அக்.17: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய இரவே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியின் மகளான அச்சிறுமி காணாமல் போய் 6 நாட்கள் கடந்த நிலையிலும், அவரைப் பற்றிய எந்தவொரு சிறு தகவலும் கிடைக்காதது பெற்றோரையும் கிராம மக்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு மோப்ப நாய், ட்ரோன் கேமராக்கள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகள் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த போதிலும், எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ.270 கோடி ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல்.. சர்வதேசக் கடத்தல் வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகியிடம் விடிய விடிய விசாரணை!!
பிறந்தநாள் இரவில் நடந்த மர்ம சம்பவம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலமுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகளான 7 வயது சிறுமி அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, அச்சிறுமி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மிகக் கோலாகலமாகக் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். விழா முடிந்து இரவு வழக்கம் போலப் பெற்றோருடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். இருப்பினும், மறுநாள் அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, சிறுமியைக் காணவில்லை என்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், தாய் பவானி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.
6-வது நாளாக தீவிரமடையும் தேடுதல் வேட்டை:
புகாரைப் பதிவு செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஆலமுண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள், விவசாய நிலங்கள், அடர்ந்த கரும்புத் தோட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் காவல்துறையினர் அ அங்குலம் அங்குலமாகத் தேடினர். அத்துடன், சம்பவத்தன்று அப்பகுதியில் பதிவான செல்போன் கோபுர எண்களைக் கைப்பற்றி, சந்தேகத்திற்குரிய நபர்களின் முகவரிகளை வைத்துத் தனிப்படை போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: “தவெகவில் எத்தனை லியோ தாஸ், பவுடர் சரத்கள் இருக்கிறார்கள்?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
கிராம மக்களிடையே அச்சமும் உறவினர்களின் கண்ணீரும்:
இவ்வளவு நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், இன்று 6-வது நாளாகச் சிறுமி குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டாரா, அல்லது அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்ததா என்று தெரியாமல் ஆலமுண்டி கிராம மக்கள் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய கையோடு தங்களது கண்முன்னே காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்துத் தரக் கோரி பெற்றோர் கண்ணீர்மல்கக் கதறி வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துச் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.