VCK Thirumavalavan: கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை.. அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து திருமாவளவன் பேச்சு!

ADMK-BJP Alliance: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததை சுட்டிக்காட்டிய திருமாவளவன், 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கோருவது வழக்கமான நடைமுறை எனவும், திமுக-விசிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு பின்னரே முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

VCK Thirumavalavan: கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை.. அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து திருமாவளவன் பேச்சு!

திருமாவளவன் - பாஜக அதிமுக கூட்டணி

Published: 

16 Jun 2025 21:55 PM

சென்னை, ஜூன் 16: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election 2025) முன்னதாக, கடந்த 2025 ஏப்ரல் 11ம் தேதி சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்தது. இதன்பிறகு, தமிழ்நாட்டில் பல கட்சி தலைவர்களும் அதிமுக – பாஜக கூட்டணி (ADMK – BJP Alliance) குறித்து விமர்சனம் செய்தனர். அதேநேரத்தில், முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் வருகின்ற 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அல்ல, பாஜகவின் ஆட்சி என்று தெரிவித்தார். இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை கொடுத்தது. இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி:

சென்னையில் இன்று அதாவது 2025 ஜூன் 16ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக – அதிமுக கூட்டணி அமைந்ததாக அமித்ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பாஜக தரப்பில்தான் இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறதே தவிர, அதிமுக தரப்பில் யாரும் எதுவும் சொல்லவில்லை. 2026 கூட்டணி ஆட்சிதான் என எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கட்டும், இதை பற்றி மேற்கொண்டு பேசுவோம்.” என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி குறித்து திருமாவளவன்:

தொடர்ந்து செய்தியாளர்கள் திமுக – விசிக கூட்டணியும் கூட்டணி ஆட்சியை அமைக்குமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பேச்சுவார்த்தையின் போதுதான் இறுதி செய்யப்பட முடியும். முன்கூட்டியே இதில் யூகமாக எந்த கருத்துகளையும் கூற முடியாது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக தொகுதிகளை கேட்போம் என்பது புதிய முழக்கமல்ல. எல்லா தேர்தலிலும், எல்லா கூட்டணியிலும் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளும் அவர்களது கட்சிகளில் நலன்களுக்காக கூடுதலாக தொகுதிகளை கேட்பார்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி, நாங்களும் சரி கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் ஏற்படாது” என்றார்.