அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது – திருமாவளவன் விளக்கம்..

Thirumavalavan: கடந்த சில நாட்களுக்கு முன் திருமாவளவனின் கார் வழக்கறிஞர் வாகனம் மீது மோதியது தொடர்பாக பேசிய அவர், “ வண்டியில் நான் அமர்ந்திருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே வம்பு செய்ய வந்தார். கட்சியைச் சேர்ந்த ஒருவரை தள்ளிப் போகச் சொல்லி வம்பு இழுத்து பேசினார். பின்னர் விசிகவினர் அவரை ஒதுங்கச் சொல்லி ஓங்கி அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதான் நடந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை போன்றவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.. இது தான் நடந்தது -  திருமாவளவன் விளக்கம்..

கோப்பு புகைப்படம்

Published: 

08 Oct 2025 14:01 PM

 IST

சென்னை, அக்டோபர் 8, 2025: கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பயணம் செய்த வாகனம், ஒரு வழக்கறிஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி, பலராலும் பேசப்படும் பொருளாக மாறின. தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக கூறியுள்ளார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கார், ஒரு வழக்கறிஞர் சென்ற இருசக்கர வாகனத்தை மோதியது. இதனால் வழக்கறிஞர் திருமாவளவனிடம் விளக்கம் கேட்க வந்தபோது, சில கட்சியினர் அவரை தாக்க முயன்றதாக கூறப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த வழக்கறிஞரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விசிகவினரின் அட்டூழியம் – அண்ணாமலை பதிவு:


இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் சர்ச்சையாக மாறின. இந்தச் சூழலில், தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது: “பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். அவர் கார் ஓட்டுநர் மோதிய நிலையில் கேள்வி எழுப்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் படிக்க: காசா இனப்படுகொலை.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்

இந்தியா தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்துள்ளார் திருமாவளவன். ஆனால் சில நேரம் கழித்து, அவரின் சொந்த பரிவாரங்களே ஒரு வழக்கறிஞரை தாக்கினர்,” என குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவன் கொடுத்த விளக்கம்:

தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருமாவளவன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ நான் வந்த கார் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், என்னை நோக்கி நேராக வந்தார். அவர் திடீரென வண்டியை நிறுத்திக் கொண்டு கத்திக் கொண்டே காரை நோக்கி வந்தார். உடனே நான் ஓட்டுநரிடம் ‘வண்டியை நிறுத்த வேண்டாம், முன்னே எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறினேன்.

மேலும் படிக்க: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆனால் அவர் வண்டியை முன்னே செல்ல முடியாதபடி தன் இருசக்கர வாகனத்தை காரின் முன் நிறுத்திவிட்டு, காரை நோக்கி வந்தார். வண்டியில் நான் அமர்ந்திருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே வம்பு செய்ய வந்தார். கட்சியைச் சேர்ந்த ஒருவரை தள்ளிப் போகச் சொல்லி வம்பு இழுத்து பேசினார். பின்னர் விசிகவினர் அவரை ஒதுங்கச் சொல்லி ஓங்கி அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுதான் நடந்தது.” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆனால் அண்ணாமலை போன்றோர் வக்காலத்து வாங்கிக் கொண்டு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த திசை திருப்பும் முயற்சியை முறியடிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டம் தோறும் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,” என தெரிவித்தார்.

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?