காற்று அடிக்கவில்லை, மழை பெய்யவில்லை.. செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? – தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்..
Udhayanidhi Stalin On TVK Government: விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரச் செலவுகள் தொடர்பாக அரசை விமர்சித்துள்ள அவர், மக்களுக்கு அளிக்கப்பட்ட மாற்றத்துக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் கோரிக்கையாக உள்ளது.
அக்டோபர் 13, 2026: தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது மாநிலத்திற்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும், இது நிர்வாகத் தோல்வி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஒரு யூனிட்டை ரூ.35க்கு வாங்க முடிவு செய்த அரசு:
தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முறைகேடு எனக் கூறி ரத்து செய்ததாகவும், தற்போது அதைவிட அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அரசு திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டால், அது அரசின் நிர்வாகத் திறனைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.
செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கியதா அரசு?
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.
இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை – மழை வரவில்லை – பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?
ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Collectionகுமாரு
— Udhay (@Udhaystalin) October 13, 2026
காற்று வீசாதது, மழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி மின்சாரத் தட்டுப்பாடு குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காகவே செயற்கையான மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மின்சாரக் கொள்முதல் தொடர்பான விவகாரத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்காகவே முதலமைச்சர் அண்டை மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பின் விளக்கம் வெளியாகவில்லை.
மின் கட்டண உயர்வு பொதுமக்களைப் பாதிக்கும்
ஏற்கெனவே மின்கட்டணச் சுமையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டால் அதன் செலவு மக்களிடம் சுமத்தப்படக்கூடும் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரச் செலவுகள் தொடர்பாக அரசை விமர்சித்துள்ள அவர், மக்களுக்கு அளிக்கப்பட்ட மாற்றத்துக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் கோரிக்கையாக உள்ளது.