கரூர் வழக்கில் திருப்பம்… தவெக மாவட்ட செயலாளரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி – வெளியான பரபரப்பு தகவல்
Karur Stampede : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதியழகனுடன் விஜய்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழு ஏற்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணைக்கு தடைவிதிக்கக்கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கரூர் மாவட்ட செயலாளரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு 5 நாட்கள் கேட்ட நிலையில் 2 நாட்கள் மட்டும் கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான புலனாய்வு குழு மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். இதனையடுத்து அவரது விசாரணையில் வழக்கு தேவையான முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – இனி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர்களது முன்ஜாமின் மனு கரூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுமாறும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் அக்டோபர் 10, 2025 நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கரூர் சம்பவத்தில் பரபரப்பு… தவெக தொண்டர் நீதிமன்றத்தில் சரண் – என்ன நடந்தது?
கரூர் செல்லும் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய விஜய், அவர்களது இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் விரைவில் கரூர் வந்து அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கரூர் செல்ல டிஜிபி அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து விஜய்யின் கரூர் பயண விவரங்களைக் கேட்டு டிஜிபி அலுவலகம் விஜய்க்கு பதில் கடிதம் எழுதியுள்ளது.