புதுச்சேரி பயணத்தை ரத்து செய்த விஜய் – காரணம் இதுதான் – பரபரப்பு தகவல்
TVK Vijay : புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் டிசம்பர் 4, 2025 நாளை நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், மிக குறுகிய நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் விஜயின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய்
சென்னை, டிசம்பர் 4: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (Vijay) டிசம்பர் 5, 2025 அன்று புதுச்சேரியில் (Puducherry) நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் உள்ள சிக்கலை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், மிக குறுகிய நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் விஜயின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு
தவெக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிசம்பர் 5, 2025 அன்று காலாபட்டு–கன்னியாகோவில் பகுதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும், சோனம்பாளையம் நீர்த் தொட்டி அருகே மேடை அமைத்து உரையாற்றவும் திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டிருந்தனர். மேலும், காவல்துறையிடம் 4 முறை விண்ணப்பித்தும் ரோடு ஷோ நடத்த பாதுகாப்பை காரணம் காட்டி அனுமதி வழங்கவில்லை.
இதையும் படிக்க : தவெகவின் வழிகாட்டி தலைவராகிறாரா ஜெயலலிதா? செங்கோட்டையனால் கிளம்பிய பகீர்!
இந்த நிலையில் டிஐஜி சத்யசுந்தரம் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க முடியாது எனவும், பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம்
ரோடு ஷோவிற்கு தடை செய்யப்பட்டதால், தவெக நிர்வாகிகள் புதுச்சேரி பழைய துறைமுகப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இந்த நிலையில், இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் குறுகிய காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை உருவானது. இந்த சூழ்நிலையில், டிசம்பர் 4, 2025 அன்று விஜய்யின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
கட்சித் தொடங்குவதற்கு முன்னதாகவே விஜய், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவ்வப்போது சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால் இந்த சந்திப்புகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனால் இரு கட்சிகளும் தேர்தல் கூட்டணி சேரலாம் என்று கூறப்பட்டது.
இதையும் படிக்க : புதுச்சேரி பிளான் கேன்சல்.. துரத்தும் கரூர் சம்பவம்.. தடையை தகர்க்குமா தவெக?
இந்த நிலையில் இப்போது ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதும், தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்தும் பலன் கிடைக்காததும், அரசியல் அரங்கில் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக சேலத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.