திருநெல்வேலியில் பள்ளி மாணவன் விபரீத முடிவு… பேருந்துகள் தீக்கிரை..! போராட்டத்தால் பரபரப்பு

Tamil Nadu School Student Suicide: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 10ம் வகுப்பு மாணவன் கவின் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கல்வி ஆசிரியரின் திட்டு காரணமாக மன உளைச்சலில் மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலியில் பள்ளி மாணவன் விபரீத முடிவு... பேருந்துகள் தீக்கிரை..! போராட்டத்தால் பரபரப்பு

கோப்புப்படம்

Published: 

18 Jul 2025 09:43 AM

திருநெல்வேலி ஜூலை 18: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் கவின் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலில் மாணவன் பள்ளியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாக அலட்சியே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த கோபத்தில் இரு பள்ளி பேருந்துகள் தீக்கிரையாகின. போலீசார் பாதுகாப்பு அதிகரித்து நிலைமையை சமாளித்தனர். உடற்கல்வி ஆசிரியர் உட்பட மூன்று பேருக்கு தற்கொலைத் தூண்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியிலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மாணவன் விபரீத முடிவு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் கவின் குமார், 2025 ஜூலை 17ஆம் தேதி பள்ளியிலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது மாணவனின் விபரீத முடிவு எனக் கருதப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் குறிக்கின்றதாக மாணவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தகவல்

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரியும் மகேஷின் மகனான கவின் குமாரை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் கடந்த 2025 ஜூலை 7ஆம் தேதி மற்ற மாணவர்களின் முன்னிலையில் திட்டி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறி அவமானப்படுத்தியதாகவும், இதனால் மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

Also Read: டி.எஸ்.பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.. மறுத்த காவல்துறை

காவல் நிலையம் முன்பு உடலுடன் போராட்டம்

மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது ஆத்திரமடைந்த சிலர், தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகளை தீ வைத்ததுடன், பள்ளி சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பை திடப்படுத்தி அமைதியை நிலைநிறுத்தினர்.

இச்சம்பவத்தில் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன், மற்றொரு ஆசிரியர் செல்லபாண்டியன் மற்றும் பள்ளி முதல்வர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 305ன் கீழ் (குழந்தையின் விபரீத முடிவுக்கு தூண்டுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம், பள்ளிகளில் மாணவர்களின் மனநிலையை மதித்து, அவர்கள் மீது உளவியல் அழுத்தம் ஏற்படாத வகையில் நடத்துவது அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மாணவனின் மரணம், கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் நலன்கள் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 2464 0050 (24 மணி நேரம்)