ஆம்புலன்ஸ் வாகனம், ஊழியரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது. இது தனிநபர் அல்லது கூட்டமாகவே தாக்குதல் நடத்தினாலும் பொருந்தும் எனவும், ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனம், ஊழியரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

108 ஆம்புலன்ஸ்

Updated On: 

25 Aug 2025 16:39 PM

சென்னை, ஆகஸ்ட் 25: தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனம் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தனிநபராகவோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும்,  ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது கூட்டத்திற்கு உள்ளே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்த நிலையில் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள் ஓட்டுநர் மற்றும் உள்ளே இருந்த மருத்துவரை தாக்க முயற்சித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழகத்தை பொறுத்தவரை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடைமுறையில் இருந்து வருகிறது. 108 என்ற எண்ணை டயல் செய்து மருத்துவ தேவை குறித்த விவரத்தை மற்றும் முகவரியை சொன்னால் போதும்.  அதன் மூலம் அருகில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிப்பது வரை அனைத்து பணிகளையும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் செய்து வருகிறது. இதனைத் தவிர்த்து தனியார் ஆம்புலன்ஸ் சேவையும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

Also Read: இபிஎஸ் கூட்டத்தில் மீண்டும் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. விரட்டியடித்த தொண்டர்களால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி பேச்சால் பரபரப்பு

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். அப்போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் கூட்டத்திற்குள் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. பொதுவாகவே ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு எப்பேர்ப்பட்ட இடமாக இருந்தாலும் சரி விலகி வழிவிட வேண்டும் என்பது விதியாக உள்ளது.

அப்படியான நிலையில் கூட்டத்திற்கு புகுந்த ஆம்புலன்ஸ் வெளியேற முயன்ற போது அதனுள் நோயாளி யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு கடும் கோபம் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி திமுக தான் பேசும் இடங்களில் எல்லாம் இதுபோன்று ஆளில்லாத ஆம்புலன்ஸ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். தொடர்ந்து இனிமேல் ஆளில்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்தால் அதனை ஓட்டி வரும் நபரை நோயாளியாக அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

Also Read: இபிஎஸ் கூட்டத்தில் மீண்டும் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. விரட்டியடித்த தொண்டர்களால் பரபரப்பு

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் இபிஎஸ் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அவர் அங்கு வருவதற்கு முன்பே கூடியிருந்த கூட்டம் முன்னிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தபோது அதில் ஆளில்லாமல் இருப்பதைக் கண்டு அதிமுக தொண்டர்கள் அதில் இருந்த ஊழியர்களை தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.