” திருவள்ளுவருக்கு காவியடித்துத் திருடப் பார்க்கிறார்கள் “ – வள்ளுவர் மறை வைரமுத்து உரை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..
Tamil Nadu CM MK Stalin: வள்ளுவர் புலவர் மட்டுமல்ல புரட்சியாளர், கவிஞர் மட்டுமல்ல கலகக்காரர். அவர் வழங்கி உள்ள கொடையான வள்ளுவத்தை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை என்றும், நம்முடைய வள்ளுவரை காவியடித்துத் திருடப் பார்க்கிறார்கள். திருட என்பதை விட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் மறை வைரமுத்து உரை நிகழ்ச்சி
சென்னை, ஜூலை 14, 2025: சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், நம்முடைய வள்ளுவரைக் காவியடித்துத் திருடப் பார்க்கிறார்கள். திருட என்பதை விட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை, அதுதான் பொருத்தமாக இருக்கும் என ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், உலக மக்களுக்கு ஒளி வழங்கும் சூரியனாக இருக்கும் திருக்குறளை படைத்த திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால் அவரின் கருத்துக்களின் வெப்பமே அவர்களைப் பொசுக்கிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ புத்தக வெளியேற்று நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் வள்ளுவனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்:
முன்னதாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வைரமுத்து திருவள்ளுவருடன் இருப்பது போன்றும், திருவள்ளுவர் மற்றும் வைரமுத்துவை முதலமைச்சர் சந்திப்பது போன்றும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 133 பேர் மேடையில் திருக்குறள் ஒப்புவித்தார்கள். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலைமைச்சர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து பேசினார்கள். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் படிக்க: ‘டெபாசிட் இழக்கும்’ அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
திருக்குறள் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான நூல் இல்லை – முதல்வர் ஸ்டாலின்:
இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
ஆனாலும், காலந்தோறும் வள்ளுவத்தின் பொருளைப் புத்தொளியில் காணும் முயற்சியை நாம் கைவிடவில்லை…
அந்த வரிசையில் இணைந்து, குறட்பாக்களோடு இயைந்து, கவியுரை… pic.twitter.com/FMiGpLKWoZ
— M.K.Stalin (@mkstalin) July 13, 2025
முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, ”அவர் பிறந்தநாளுக்கு நாம்தான் பரிசு கொடுக்க வேண்டும், ஆனால் அவர் நமக்கெல்லாம் இந்தப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். திருக்குறள் இரண்டு அடி தான், ஆனால் 2000 ஆண்டாக அதற்குப் புதுப் புதுப் பொருளைச் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புது வழியில் நல்வழியைச் சொல்லக்கூடிய இலக்கியமாக உயர்ந்து இருக்கிறது.
அதனால்தான் பரிமேலழகர் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் வரை உரை எழுதி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு கவிப்பேரரசுவும் இணைந்திருக்கிறார். திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் அவருக்கு ஒவ்வாத சாயத்தைப் பூசி, மறைப்பதற்கு முயற்சிகள் நடக்கும் இந்த காலகட்டத்தில் தனது உரைவாளை எடுத்து, உடைவாளாக வீசி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் இது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான நூல் இல்லை.
மேலும் படிக்க: அதிமுகவின் தேர்தல் வியூகம்.. 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. முழு விவரம்!
அதனால்தான் திருக்குறளின் பொருளை உணர்ந்த தந்தை பெரியார் 60 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாட்டை நடத்தினார். திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினர். மதங்களை வெறுத்தவர், உங்கள் மதம் குறள் மதம் என்று சொல்லுங்கள் என்று பரப்பினார். திருக்குறளைப் படிப்பவர்களாக மட்டுமல்லாமல் பின்பற்றுபவர்களாக நாம் வாழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
தமிழினத்தின் சின்னம் திருக்குறள்தான்:
கலைஞர் குறள் மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்று சொன்னதோடு, வள்ளுவர் கோட்டத்தை கட்டினார், குமரி முனையில் சிலை வைத்தார், குறலோவியம் தீட்டினார், திருக்குறளுக்கு உரை எழுதினார், தமிழினத்தின் சின்னம் திருக்குறள்தான் என்பதை அடையாளம் காட்டிச் செம்மொழி மாநாட்டின் லட்சிணையோடு வள்ளுவரையும் இடம் பெறச் செய்தார்.
திருக்குறளை தூக்கி பிடித்து, இதுதான் நமது இனத்திற்கான கலங்கரை விளக்கம் என்று போராடி, வாதாடி வருவது தான் நம்முடைய திராவிட இயக்கம். திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னமும் இருக்கிறது என ஏராளமான அறிஞர்கள் உரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியின் தேவை இன்றும் உள்ளது.
தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க முயற்சி:
காலங்கள் கடந்து வாழும் வள்ளுவ மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னமும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாகச் சொல்லும் மாபெரும் அமைப்பை டெல்லியில் உருவாக்க வேண்டும். வள்ளுவர் மறையின் பொருளை இந்தியச் சமூகத்தில் விதைக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வள்ளுவர் புலவர் மட்டுமல்ல புரட்சியாளர், கவிஞர் மட்டுமல்ல கலகக்காரர். அவர் வழங்கி உள்ள கொடையான வள்ளுவத்தை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. வள்ளுவத்தை பரப்புவதுடன், மனிதர்களுக்கு எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மீது பூச நினைக்கிற அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயம் எதிர்க்க வேண்டும்.
சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், நம்முடைய வள்ளுவரை காவியடித்துத் திருடப் பார்க்கிறார்கள். திருட என்பதை விட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை, அதுதான் பொருத்தமாக இருக்கும். திருவள்ளுவர் என்பவர், உலகம் பழிப்பதை ஒழித்து விட்டால் மழித்தலும் நீட்டலும் வேண்டாம்” என பேசியுள்ளார்.