வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகமா? சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..
SIR Camp At Chennai: அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில் அந்த படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த சந்தேகங்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 19, 2025: சென்னையில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான உதவி மையங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. நவம்பர் 18, 2025 முதல் வரும் நவம்பர் 25, 2025 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025, நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று அதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் படிவம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள்:
இந்நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் உதவி மையம் செயல்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான குமரகுருபரன் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு மறுப்பு? உண்மை என்ன?
நவம்பர் 18, 2025 முதல் நவம்பர் 25, 2025 ஆம் தேதி வரை 987 வாக்குச் சாவடிகளிலும் இந்த உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வசதிக்காக இந்த முகாம்கள் செயல்படும் எனவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு துணையாக ஒருவர் வரலாம் என கூறப்பட்டுள்ளது.
சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில், படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
எஸ்ஐஆர் (SIR) படிவங்களில் உறவினர்களின் பெயரில் எந்த உறவினரின் பெயரை குறிப்பிட வேண்டும், அவர்கள் தற்போது உயிரோடு இல்லையெனில் எந்த உறவினர் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் உள்ளிட்ட வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் விளக்கம் அளிப்பார்கள்.
மேலும் படிக்க: தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர் – போலீசார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் 92 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில் அந்த படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த சந்தேகங்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.