பொள்ளாச்சி வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Pollachi Harassment Case : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, மே 15 : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச் செயலில் (pollachi harassment case) பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கு கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் (mk stalin) அறிவித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் வழங்கப்படும் என அறித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் வழங்கிய கடுமையான ஆயுள் தண்டனை பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தற்போதைய அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார் அளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. நீதிக்காகப் போராடிய பெண்களின் இத்தகைய துணிச்சல் பாராட்டத்தக்கது. அதன்படி, நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.85 லட்சத்துடன் கூடுதலாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.25 லட்சமும் உயர்த்தி வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சி வழக்கு
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரின் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், ஹேரன்பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. வழக்கின் முதல் குற்றப்பத்திரிக்கை 2019 மே 24ஆம் தேதி தாக்குதல் செய்யப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு , 2025 மே 13ஆ தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு அனைத்து தரப்பினர் வரவேற்று வருகின்றனர். அதோடு, பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க தாங்கள் தான் காரணம் என திமுக, அதிமுக மாறி மாறி கூறி வருகிறது. அதிமுக தங்கள் ஆடசி காலத்தில் சிபிஐக்கு மாற்றினோம். அதனால் தான் நீதி கிடைத்தது என கூறி வருகிறது. மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும் என கூறியிருந்தோம் என்று திமுக கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.