AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி அருகே மாயமான சிறுமி 7ஆவது நாளாக மோப்ப நாய், 50 ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை

Girl Missing Case : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைக் கண்டுபிடிக்கும் பணி, தொடர்ந்து 7ஆவது நாளாக அக்டோபர் 18, 2026 இன்றும் நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டி மலைப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடனும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலமும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செஞ்சி அருகே மாயமான சிறுமி  7ஆவது நாளாக மோப்ப நாய், 50 ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை
7 வயது சிறுமி மாயம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Oct 2026 16:03 PM IST

விழுப்புரம், அக்டோபர் 18: விழுப்புரம் (Viluppuram) மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைக் கண்டுபிடிக்கும் பணி, தொடர்ந்து 7ஆவது நாளாக அக்டோபர் 18, 2026 இன்றும் நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டி மலைப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடனும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலமும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் இரவில் மாயமான சிறுமி

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர்கள் வடிவேலு – பவானி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகளான 7 வயதாகும் ஹேமாவதி கடந்த அக்டோபர் 11, 2026 தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் அன்றிரவு வீட்டில் பெற்றோருடன் உறங்கியுள்ளார். இந்த நிலையில் மறுநாள் அதிகாலை சுமார் 5 மணிக்குப் பெற்றோர் கண்விழித்துப் பார்த்தபோது, அருகில் உறங்கிய மகளைக் காணவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மகளை காணாததால் கலக்கமடைந்தனர்.

இதையும் படிக்க : “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியைக் கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 6 நாட்களாகத் தேடியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சோதனை

ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று, அங்கு வசிப்பவர்களின் விவரங்களைப் போலீசார் சேகரித்து வருகின்றனர். வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீடு மற்றும் அதையொட்டிய தோட்ட பகுதிகளில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் ஆகியவற்றையும், மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறை இடுக்குகளையும் 50 ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆலம்பூண்டி மலை மீது 20 போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர், ஆலம்பூண்டி மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள கிணறுகளிலும் இறங்கித் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க : பூந்தமல்லி அருகே போதை மாத்திரை விற்பனை.. 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

மேலும் ஆழம் அதிகமுள்ள பெரிய கிணறுகளில் தேடுவதற்காக, மரக்காணத்திலிருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை வீசியும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாகியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், குடும்பத்தினரும் கிராம மக்களும் கடும் கவலையில் உள்ளனர்.

Follow Us