திருச்சியிலிருந்து வெளியூருக்கு போகணுமா? இனி இங்குதான் பஸ் ஏற வேண்டும்…
Trichy's New Panjapur Bus Stand: திருச்சியில் 246 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. இது தினசரி 3200 பேருந்துகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது. நகர்ப்புற மற்றும் வெளியூர் பஸ்களுக்கான தனித்தனி ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மே 07: திருச்சியில் (Trichy) பஞ்சப்பூர் (Panjapur) ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) திறக்கப்பட உள்ளது. 246 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்நிலையம், தினசரி 3,200 பேருந்துகளை கையாளும் திறனைக் கொண்டது. நகர்ப் பஸ்கள் முதல் தளத்தில், வெளியூர் பஸ்கள் தரை தளத்தில் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மத்திய பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. இணையத்தில் வெளியான டிரோன் காட்சிகள், இந்நிலையத்தின் பிரமாண்டத்தைக் காட்டுகின்றன.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது. பஞ்சப்பூரில் 246 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் போலவே, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் கடைகள், உணவகங்கள், ஓட்டல்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வெளியூர் பஸ்கள் தரை தளத்தில் இயக்கப்படும்; நகர்ப் பஸ்கள் முதல் மாடியில் இயக்கப்படவுள்ளன. தினசரி 3,200 பஸ்கள் இயக்கப்படும் இந்த நிலையத்தில் 1,257 நகர பஸ்கள், 1,929 வெளியூர் பஸ்கள் செயல்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் புதிய முயற்சி
இந்நிலையில், தற்போது மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து வெளியூர் பஸ்களும் இனிமேல் பஞ்சப்பூரில் இருந்து இயக்கப்படும். இதனால், திருச்சி மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் செல்லும் பயணிகள் ‘நம்பர் ஒன் டோல்கேட்’ அல்லது ‘பால் பண்ணை’வில் இறங்கி பஸ் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
முதல்வரின் நலத்திட்ட உதவிகள்
திறப்பு விழாவையொட்டி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழா முடிந்தவுடன், 512 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். 100 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், 830 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் தொடர்பான டிரோன் காட்சி
பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் தொடர்பான டிரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பொதுமக்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. பசுமை வளங்களுடன், பரந்த பரப்பளவில், சொகுசான இடப்பிரிப்புகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டமைப்பு, “திருச்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்” என்ற பெயரில் மக்கள் சேவைக்கு தயாராகியுள்ளது.