அக்னிவீர் திட்டம்.. ஈரோட்டில் ஆகஸ்ட் 25ம் தேதி ஆட்சேர்ப்பு முகாம்!
Agnipath Scheme: ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் 25, 2025 அன்று அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டூட்டி, டெக்னிக்கல், ட்ரேட்ஸ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழகம் மற்றும் சுற்றுப்புற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிவீர் திட்டம்
ஈரோடு, ஆகஸ்ட் 19: அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு முகாம் வரும் 2025, ஆகஸ்ட் 25ம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது ஈரோடு வ.உ.சிதம்பரனார் பூங்கா அருகே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்னிவீர் ஜென்ரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன், அக்னிவீர் ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிக்கு கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி, தேனி, மதுரை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், பார்மாசிஸ்ட், ஜூனியர் கமிஷன் அதிகாரி, அவில்தார் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
வெளியான அட்டவணை
அக்னிவீர் ஜெனரல் டூட்டி பதவிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 27ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், 28ஆம் தேதி கோவை,ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திண்டுக்கல், மற்றும் மதுரை மாவட்டங்களை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆட்சேர்க்கும் முகாமானது நடைபெறுகிறது.
Also Read: ஆபரேஷன் சிந்தூருக்கு போடப்பட்ட பிளான்.. நடந்தது எப்படி? ராணுவத்தினர் விளக்கம்!
அதேசமயம் அக்னிவீர் கிளர்க் பதவிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அக்னிவீர் ஜி.டி தொழில்நுட்பம் வகை பணிக்கு 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நாமக்கல்,திண்டுக்கல், தர்மபுரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கலந்து கொள்ளலாம்.
ஆட்சேர்ப்பு முகாம்
அதை போல் அக்னிவீர் ஜிடி தொழில்நுட்பம் வகை பணியிடங்களுக்கு செப்டம்பர் 2ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களைச் சார்ந்தவருக்கும் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மத்திய வகைகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும். செப்டம்பர் 5ஆம் தேதி மருத்துவ பரிசோதனை நடைபெறும் எனவும், செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் வேலைகள் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அல்லாத ராணுவ படையினருக்கு ஆட்களை தேர்வு செய்யும் திட்டமே அக்னிவீர் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டும். ஆண்டுக்கு இரண்டு முறை இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.