சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..
Montha Cyclone: வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்வதால், தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
மோன்தா புயல் – அக்டோபர் 26, 2025: தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 26, 2025 ஆம் தேதி இன்று காலை அது அதே பகுதியில் நிலவுகிறது. அது அட்சரேகை 11.1° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.2° கிழக்கு அருகே, போர்ட் பிளேருக்கு (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) மேற்கே சுமார் 610 கிமீ, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கில் 790 கிமீ, விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கில் 850 கிமீ, காக்கிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கில் 840 கிமீ மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்கிழக்கில் 950 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல்:
இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு அது வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28 ஆம் தேதி காலைக்குள் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..
வடக்கு-வடமேற்கு நோக்கி மேலும் நகர்ந்து, அக்டோபர் 28 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில், காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90–100 கிமீ வேகத்தில், சில நேரங்களில் 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்வதால், தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 26, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..
அதேபோல் அக்டோபர் 27, 2025 அன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28, 2025 அன்று புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயலின் பாதை:
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தமிழகக் கடலோர பகுதிகளை ஒட்டி ஆந்திராவை நோக்கி பயணம் மேற்கொண்டால், மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், இந்த புயல் தமிழகக் கடலோர பகுதிகளுக்கு அருகில் வராமல், நேரடியாக ஆந்திராவை நோக்கி நகர்ந்தால், தற்போது நிலவும் நிலைதான் நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.