Tamilnadu Weather: தமிழகத்திற்கு இன்றும் கனமழை எச்சரிக்கை..!
Tamil Nadu Rain: தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு இன்றும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு மே 26: தமிழகத்தில் (Tamilnadu) கடந்த சில நாட்களாக வெப்பச்சலனத்தால் பல்வேறு இடங்களில் கனமழை (Heavy Rain in Tamilnadu) பெய்து வருகிறது. அதேநேரத்தில், 2025 மே 25 மற்றும் 26 தேதிகளுக்காக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (India Meteorological Department Red Alert) அறிவித்தது. இதன் விளைவாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. பாதுகாப்பு காரணமாக தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், படகு இல்லம் உள்ளிட்ட ஏழு சுற்றுலாத் தலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை
இந்த நிலையில், 2025 மே 26 மாலை 7 மணி வரை சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. அதேசமயம், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்
மேலும், 2025 மே 27-ஆம் தேதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்துடன் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ரெட் அலர்ட்
மலைப்பகுதிகள் மற்றும் தெற்காசிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது. குறிப்பாக:
2025 மே 27: கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன அல்லது மிக கனமழை பெய்யக்கூடும்.
2025 மே 28 & 29: மாநிலம் முழுவதும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
2025 மே 30 & 31: ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு மழை வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2025 மே 26 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.