கிரிண்டர் செயலி மூலம் வீட்டுக்கு வந்த 3 பேர்.. இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த ஹித்தேஷ் என்பவர் கிரிண்டர் செயலியின் மூலம் அறிமுகமான நபர்களை வீட்டிற்கு அழைத்ததில், அவர்களால் 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் நேரம் செலவழிக்க நினைத்த இவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மே 16: சென்னை (Chennai Vyasarpadi) வியாசர்பாடியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தனிமையில் நேரம் செலவிட நினைத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகளவு குற்றங்கள் நடைபெறுவதாக பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பல்வேறு வகைகளில் குற்ற சம்பவங்கள் பெருகி வருகிறது. இந்த குற்ற சம்பவங்களுக்கு அடிப்படையாக போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே 2025 ஏப்ரல் 10-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கிரிண்டர் செயலியை (Grindr App) பயன்படுத்தி தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், அதனை உடனே தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த செயலி மூலம் நடைபெற்றுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தனிமையில் நேரம் செலவழிக்க விரும்பிய நபர்
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள எம்கேபி நகரை சேர்ந்தவர் ஹித்தேஷ். 26 வயதான இவர் அங்குள்ள மூன்றாவது லிங்க் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஹித்தேஷ் மற்றும் அவரது தந்தை இருவரும் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் உறவினர் திருமணத்திற்காக பெற்றோர் இருவரும் பெங்களூரு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்த ஹித்தேஷ் ஜாலியாக பொழுதைப் போக்க விரும்பியுள்ளார். ஆனால் அவரது விருப்பம் விபரீதத்தில் முடிந்தது.
அதன்படி கிரிண்டர் செயலி மூலம் தனக்கு ஏற்கனவே பழக்கமான ஒருவரை தன் தன் பாலின உறவுக்கு ஹித்தேஷ் அழைத்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி அவரது வீட்டுக்கு ஹித்தேஷ் அழைத்த நபருடன் ஒரு ஆண் மற்றும் பெண் வந்துள்ளனர். அடுத்த சில நொடிகளில் ஹித்தேஷை கட்டிப் போட்டுவிட்டு அந்த இரண்டு பேரும் தாங்கள் அழைத்து வந்த பெண்ணுடன் தனிமையில் நேரம் செலவிட்டுள்ளனர்.
பின்னர் இறுதியாக ஹித்தேஷை பாத்ரூமில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிலிருந்து 31 சவரன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். பாத்ரூமில் அடைப்பட்டு கிடந்த நிலையில் ஒரு வழியாக கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ஹித்தேஷ் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பாத்ரூமில் இருந்த ஹித்தேஷை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடு போன நகைகள் குறித்தும், வீட்டிற்கு வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் பெங்களூருக்கு சென்றுள்ள ஹித்தேஷின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.