“திமுக ஒரு கட்சியே அல்ல, கார்ப்பரேட் கம்பெனி”.. எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!!
தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடந்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியை பலப்படுத்தி கூட்டணியையும் உறுதிப்படுத்த அவர் பல்வேறு வியூகங்களை வகுத்து மறைமுக பேச்சுவார்த்ததை நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம், நவம்பர் 09: இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான் என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான ஆட்சி இங்கு நடப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஏனெனில், இம்முறை அவருக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. அதோடு, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து இருந்தவர்கள் ஒன்றாக இணைந்து அதிமுக ஒருங்கிணைய குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி, கட்சியில் உள்ள அவர்களது ஆதரவாளர்களையும் களையெடுத்து வருகிறார். இதனால், தேர்தலில் இவர்கள் அதிமுகவுக்கு எதிராக பணியாற்றும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதையும் படிக்க : ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்… 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்… ஓபிஎஸ் மீது வைகோ குற்றச்சாட்டு
அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும்:
இப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம், தனது பரப்புரையையும் தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில், சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டப்படி தவறு செய்பவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த ஆட்சியில் அப்படியா இருக்கிறது? வேண்டுமென்று திட்டமிட்டு துரோகிகளும் இன்று பேசி வருகின்றனர். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் இயக்கத்திற்கு விசுவாசமானவர்களா?
எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம் கூடவே இருந்து நம்மை வீழ்த்த முயன்றார்கள். அத்தனை பேரையும் நாம் வீழ்த்தி, தற்போது அதிமுக தலை நிமிர்ந்து நிற்கிறது. மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்து உள்ளோம். வரும் தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். மக்களின் ஆதரவுடன் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்று உறுதி தெரிவித்தார்.
குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வர்:
தமிழகத்தில் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் இதை எல்லாம் தடுத்து நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இல்லை. நான்கரை ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு விட்டது. ஆனால், நான்கரை ஆண்டுகளில் துறைவாரியாக லஞ்ச ஊழல் நிறைந்து விட்டது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான் என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான ஆட்சி இங்கு நடப்பதாகக் கூறப்படுகிறது. மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை; குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வர்தான் தற்போதைய முதலவர். திமுக என்றால் குடும்பம்; குடும்பம் என்றால் திமுக. திமுக ஒரு கட்சியே அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றார்.
இதையும் படிக்க : எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்
தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள்:
தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள் இருக்கின்றனர்; நான்கு அதிகார மையங்களும் இருக்கின்றன. ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி ஸ்டாலின், மூன்றாவது ஸ்டாலினின் மனைவி, நான்காவது மக்களுக்கே தெரியும். உதயநிதி ஸ்டாலினும், சபரிசனும் கைகளில் ரூ.30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் தடுமாறுவதாக அக்கட்சி அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் பேசிய ஆடியோ வைரலானது. ஆனால், இந்த ஆடியோ குறித்து இதுவரை முதல்வர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.