AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் தேமுதிக.. முதல்வருடன் பிரேமலதா சந்திப்பு

பிரேமலதா, தற்போது திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதையொட்டி, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். அதிமுக கூட்டணியில் வாக்குறுதி அளித்தபடி, எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தராததால் அக்கட்சி மீது பிரேமலதா அதிருப்தியில் இருந்து வந்தார்.

திமுக கூட்டணியில் தேமுதிக.. முதல்வருடன் பிரேமலதா சந்திப்பு
திமுக கூட்டணியில் தேமுதிக
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Feb 2026 11:35 AM IST

சென்னை, பிப்ரவரி 19: முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. திமுக கூட்டணியா? அதிமுக கூட்டணியா? என முடிவெடுக்காமல் தாமதித்து வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, தற்போது திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதையொட்டி, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷூம் உடன் இருந்தார். அதேபோல், திமுக தரப்பில் கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

பலனளிக்காத அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை:

அதிமுக கூட்டணியில் வாக்குறுதி அளித்தபடி, எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தராததால் அக்கட்சி மீது பிரேமலதா அதிருப்தியில் இருந்து வந்தார். எனினும், தேமுதிகவை அதிமுக – பாஜக கூட்டணியில் கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. முதலில் அதிமுகவினர் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜக தலைவர்கள் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும், அவை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

தேமுதிக முடிவால் எதிர்கட்சிகள் கலக்கம்:

திமுக – தேமுதிக இடையேயான திடீர் நெருக்கம் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேமுதிகவிற்கு இன்றும் ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதோடு, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பும், ஈர்ப்பும் இப்போதும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிகவின் இந்த ‘சென்டிமென்ட்’ பலம் கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

தேமுதிகவின் கூட்டணி பயணம்:

2005ல் தொடங்கப்பட்ட தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 2005ல் கட்சி தொடங்கிய வேகத்தில் 2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தேமுதிக, சுமார் 8.4% வாக்குகளை பெற்றது. அப்போது விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வென்றார். தொடர்ந்து, 2009 மக்களவை தேர்தலிலும் தேமுதிக தனித்தே களம் கண்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும், 10.3% வாக்குகளை பெற்றது.

மேலும் படிக்க: திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்.. 23ம் தேதி முதல் வீடு, வீடாக பிராசாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்!!

தொடர் தோல்வியில் தேமுதிக:

அதன்பின் 2011ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது. ஆனால் அந்த தேர்தலுக்கு பின் தேமுதிக சரியத் தொடங்கியது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின், 2016ல் மக்கள் நலக் கூட்டணி, 2019ல் பாஜக கூட்டணி, 2021ல் அமமுக கூட்டணி, 2024ல் அதிமுக கூட்டணியிலும் இணைந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் பிரேமலதா இணைந்ததாக கூறப்படுகிறது.