குற்றால சாரல் திருவிழா… எப்போது தொடங்கும்.? வெளியான அறிவிப்பு

Charal Festival Opening Ceremony: குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை 19 முதல் 27 வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. மலர்க் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

குற்றால சாரல் திருவிழா... எப்போது தொடங்கும்.? வெளியான அறிவிப்பு

குற்றால சாரல் திருவிழா

Published: 

10 Jul 2025 11:40 AM

தென்காசி ஜூலை 10: தென்காசி (Tenkasi) மாவட்டத்தில் நடைபெறும் குற்றால சாரல் திருவிழா (Courtala Charal Festival) , 2025 ஜூலை 19 முதல் 27 வரை 9 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் (Minister Sathur Ramachandran) மற்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைக்க உள்ளனர். தொடக்க நான்கு நாட்களில் ஐந்தருவியில் மலர்க் கண்காட்சி இடம்பெறும். தினமும் பரதநாட்டியம், நாட்டிய நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகள், மாநிலக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெறும். சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றால சாரல் திருவிழா

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சாரல் திருவிழா, இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. சீசன் காலத்தில் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில், இந்தத் திருவிழா சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். விழாவின் முதல் நான்கு நாட்கள் கண்கவர் மலர்க் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

சாரல் திருவிழா தொடக்க விழா மற்றும் சிறப்பு நிகழ்வுகள்

இந்த ஆண்டிற்கான குற்றால சாரல் திருவிழாவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். தொடக்க விழாவில் தென்காசி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

திருவிழாவின் முக்கிய அம்சமாக, முதல் நான்கு நாட்கள் (ஜூலை 19 முதல் 22 வரை) ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாகப் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Also Read: உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் மறைந்திருக்கும் சுரங்கங்கள்..!

தினசரி கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

சாரல் திருவிழாவின் ஒன்பது நாட்களும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அவற்றின் விவரங்கள்:

ஜூலை 19 (முதல் நாள்): பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

ஜூலை 20: கொலு கொலு குழந்தைகள் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, கை சிலம்பாட்டம், கேரளா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

ஜூலை 21: யோகாசனப் போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை நிகழ்ச்சி, தோல் பாவைக் கூத்து மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி.

ஜூலை 22: படகுப் போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடர் நடனம், கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிகள்.

ஜூலை 23: பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், கவிதை மற்றும் பாட்டுப் போட்டி, திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள், கனியான் கூத்து, பரதநாட்டியம், கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகள்.

ஜூலை 24: பெண்களுக்கான கோலப் போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மலர் கம்பம், பரதநாட்டியம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள்.

ஜூலை 25: அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவுப் போட்டி, நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம், கிளாரினெட் நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரையிசை தெம்மாங்கு நிகழ்ச்சிகள்.

ஜூலை 26: பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டு மேளம்) மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகள்.

ஜூலை 27 (இறுதி நாள்): நாய்கள் கண்காட்சி, நாட்டிய நாடகம், கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மாடாட்டம் மற்றும் மயிலாட்டம், மராட்டிய மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள்.

இந்த ஆண்டு சாரல் திருவிழா 9 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற உள்ளதால், குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.