6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
வானிலை நிலவரம், பிப்ரவரி 21, 2026: பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. அதே சமயம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதே பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் – ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
பிப்ரவரி 21, 2026 ஆகிய இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22 ஆம் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜனநயாகன் படத்துக்கு தடை.. சிபிஐ விசாரணை… பாஜக அழுத்தம் கொடுக்கிறது – அருண்ராஜ் பேச்சால் பரபரப்பு
தமிழகத்தில் தொடரும் மழை:
பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 26 ஆம் தேதி தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், இரவு நேர வெப்பநிலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. வரக்கூடிய நாட்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலைகள் வருமாறு:
-
ஈரோடு – 35.6°C
-
வேலூர் – 34.6°C
-
சேலம் – 35°C
-
பாளையங்கோட்டை – 34°C
-
மதுரை – 34.2°C
-
கரூர் – 35°C
சென்னையில் அதிகபட்சமாக 33.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.