10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

10th, 12th public exams timetable: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். ஏற்கெனவே, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், தேர்வு தேதிகளை இறுதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தேர்வு தேதிகளை எதிர்பார்த்து மாணவர்களும் காத்திருக்கின்றனர்.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ்

Updated On: 

25 Oct 2025 12:53 PM

 IST

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு தேதிகள் அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு குறித்த எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேதி அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்வு அட்டவணை தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே தேதி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், தேர்தலையொட்டி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. நல்வாய்ப்பாக 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தேர்வு தேதிகளை குழப்பமின்றி முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Also read: மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..

ஏற்கெனவே, சிபிஎஸ்இ வாரியம் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கடந்த மாதமே அறிவித்துவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17ல் தொடங்கி ஏப்ரல் 4ல் முடிவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17ல் தொடங்கி மார்ச் 18ல் நிறைவடைகிறது. நாடு முழுவதும் இத்தேர்வுகளை சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. எனினும், இது தற்காலிக அட்டவணை என்றும், தேவைப்பட்டால் திருத்தங்கள் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த இருக்கும் தேர்வுத்துறை ஏற்கெனவே, பொதுத்தேர்வு அட்டவணைகளை தயாரித்து அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த அட்டவணை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவை உறுதியாகும் பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் எனவும் தெரிகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்த போதும், தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அந்தவகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி நிறைவு பெற்றது. அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெற்றது. அதேபோல, 2026ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தி முடிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.

Also read: வரும் அக்.27 கரூர் மக்களை சந்திக்கும் விஜய்.. எங்கே? வெளியான தகவல்..

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். இதுகுறித்து நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேதிதகள் முடிவு செய்யப்பட்டு பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.