இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை கலந்து ஆலோசிக்க வேண்டும் – சி.வி சண்முகம்
CV Shanmugam On ADMK: கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து, அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுகவை வலுப்படுத்த முடியும் என்றும், மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியைக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 14, 2026: நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வி குறித்து கட்சித் தலைமை கலந்தாலோசிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் கட்சிக்குள் மீண்டும் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தனித்தனியாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் எதிர்காலம் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மழைக்கு ரெடியா மக்களே! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?
பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும்!
இதுகுறித்து பேசிய சி.வி.சண்முகம், “நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வி குறித்து அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி கட்சித் தலைமை ஆராய வேண்டும். இந்தத் தோல்வி எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்களுக்குத் தற்போது தேவை நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதன் மூலம் கட்சியை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும்
மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனது தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “நான் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணை நின்று ஒத்துழைப்பு அளிப்போம்” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை என்றும், அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கட்சியின் சோதனைக் காலங்களில் உடன் இருந்த அனைவரையும் அதிமுக தலைமை அரவணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பொதுச்செயலாளர் மீது அதிருப்தியா?
அதிமுக பொதுச்செயலாளர் மீது அதிருப்தி உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கருத்து வேறுபாடு இருப்பது தெரிந்த விஷயம்தானே” என சி.வி.சண்முகம் பதிலளித்தார்.
மேலும், கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து, அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுகவை வலுப்படுத்த முடியும் என்றும், மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியைக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் எழுந்துள்ள இந்தக் கருத்து வேறுபாடுகள், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.