18 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது..
இந்த நிலையில் அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ரயில் சேவை இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் வரை 43 ஜோடி ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 14, 2026: 18 ஆண்டுகளாக காத்திருந்த வேளச்சேரி–பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை இன்று காலை முதல் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில் சேவையை நம்பி தினசரி பயணம் செய்து வருகின்றனர். சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குறைந்த செலவில் எளிதாக பயணம் செய்யவும் மக்கள் அதிகமாக மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவையும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இந்த பறக்கும் ரயில் சேவை வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கிண்டி, அடையார் மற்றும் பசுமை வழிச்சாலை வழியாக சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம்.. ஏஜென்சிகளில் மக்கள் முற்றுகை.. முடங்கிய ஆன்லைன் புக்கிங்!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில்:
வேளச்சேரி–பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் நீண்ட காலமாக நிறைவு பெறாமல் இருந்தன.
கடந்த சில மாதங்களாக இந்த திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தேவையான கட்டமைப்புகள் முழுமையாக அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்டன.
வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரயில் சேவை நீட்டிப்பு திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் பாதுகாப்பு சோதனையின் போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதால் சேவை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ரயில் சேவை:
இந்த நிலையில் அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ரயில் சேவை இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் வரை 43 ஜோடி ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இரண்டு ஜோடி ரயில்கள் இயக்கப்படும். மேலும், பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை மூன்று ஜோடி ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரவேற்பு:
இந்த புதிய சேவையின் மூலம் சென்னை நகரின் பல பகுதிகளுக்கு மக்கள் எளிதாக பயணம் செய்யும் வசதி கிடைத்துள்ளது. மேலும், வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை இந்த ரயில் மூலம் சுமார் 10 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
இந்த சேவையின் மூலம் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த திட்டம் தற்போது நிறைவேறியுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்