திருப்பரங்குன்றத்தில் குமரனுக்கு கொண்டாட்டம்.. 14 ஆண்டுகளுக்கு பின் நடந்த மகா கும்பாபிஷேக விழா..

Thiruparankundram Muruagan Temple: ஜூலை 14 2025 தேதியான இன்று அதிகாலை எட்டாம் கால பூஜை முடிந்த பிறகு காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் குமரனுக்கு கொண்டாட்டம்.. 14 ஆண்டுகளுக்கு பின் நடந்த மகா கும்பாபிஷேக விழா..

திருப்பரங்குன்றம்

Updated On: 

14 Jul 2025 09:45 AM

திருப்பரங்குன்றம், ஜூலை 14, 2025: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று அதாவது ஜூலை 14 2025 தேதியான இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 14 ஆண்டுகள் கழித்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. இதற்காக ரூபாய் 2.44 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சுவாமி தரிசனத்திற்கு மக்கள் செல்லும் வழியில் இரும்பு கம்பிகள் அமைப்பது, பிரகாரங்களை புனரமைப்பது கோபுரங்களில் வண்ணப் பூச்சுகள் அடிப்பது போன்ற திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025, ஜூலை 11ஆம் தேதி முதல் தெய்வானை மண்டபத்தில் யாக சாலைகள் அமைத்து சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்காக அங்கு 75 ஹோம்குண்டங்கள் அமைக்கப்பட்டது.

வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா:

ஜூலை 14 2025 தேதியான இன்று அதிகாலை எட்டாம் கால பூஜை முடிந்த பிறகு காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலைகள் பூஜைகள் நடத்த 150 சிவாச்சாரியார்கள் மற்றும் 85 ஓதுவார்கள் வருகை தந்திருந்தனர்.

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி மூலவர் விமானத்தில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவின்போது மூலவர் விமானத்தில் புனித நன்னீர் ஊற்றி மலர்கள் தூவி தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய விக்ரகங்களுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.

பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான மக்கள்:

கும்பாபிஷேக விழாவை ஒட்டி திருப்பரங்குன்றமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக பத்து ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மீனாட்சியம்மன் திருக்கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜூலை 13 2025 தேதியான நேற்று மாலை திருப்பரங்குன்றத்திற்கு பஞ்சமூர்த்திகளுடன் வருகை தந்து எழுந்தருளனார்கள். இதன் காரணமாக ஜூலை 14 2025 தேதியான இன்று மீனாட்சியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நந்திக்கு திருமணம் நடந்த கோயில்.. இந்த சிவாலயம் பற்றி தெரியுமா?

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவை முடித்த பின்பு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் மீண்டும் புறப்பாடு செய்து மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு சென்றடைவார்கள். ஜூலை 15 2025 தேதியான நாளை முதல் மீனாட்சியம்மன் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரம் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் பூத் அமைத்தும், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு!

பொது தரிசனம் மட்டுமே:


அதே போல் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்ற சுற்றி பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழாவையொட்டி அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ளூர்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது வழிபாடுக்கு மட்டுமே அனுமது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையும் (ஜூலை 15, 2025) சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.