கழிவுநீர்த் தொட்டியில் மிதந்த குழந்தைகள்… தாய் செய்த கொடூரம்.. சேலத்தில் பயங்கரம்!
Salem Crime News : சேலத்தில் தனது இரண்டு குழந்தைகளை செப்டிக் டேங்கில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதே செப்டிக் டேங்கில் குதித்து தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது குழந்தைகளை தாய் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம், ஏப்ரல் 30: சேலம் மாவட்டத்தில் இரண்டு மகன்களை தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிநீர்த் தொட்டியில் மூழ்கடித்து இரண்டு குழந்தைகளை தாய் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னதம்பி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இளவரசி (34). இந்த தம்பதிக்கு விக்னேஸ்வரன் (6), சதீஷ்குமார் (3) என இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் விஜயகுமார், அடிக்கடி மனைவி இளவரசியுடன் சண்டை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
கழிவுநீர் தொட்டியில் மிதந்த குழந்தைகள்
மேலும், சந்கேத்தில் மனைவியை பலமுறை அடித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 28ஆம் தேதி கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு விஜயகுமார் வீட்டில் வந்தார். அப்போது, மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இதனை கோபித்துக் கொண்டு விஜயகுமார் வீட்டை விட்டு சென்றார். இதற்கிடையே, இளவரசி தனது இரண்டு மகன்களையும் செப்டிக் டேக்கில் மூழ்கடித்துள்ளார். இதனால், இருவரும் கழிவு நீர்த் தொட்டியில் மிதந்துள்ளனர். பின்னர், இளவரசி அங்கிருந்து தப்பிச் சென்று அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது.
இரண்டு குழந்தைகள் செப்டிக் டேங்கில் மிதந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டடதாக கூறியுள்ளனர்.
நடந்தது என்ன?
இதனை அறிந்த போலீசார், இரண்டு குழந்தைகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகன்கள் இறந்தது குறித்து விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் தூக்கியம்பாளையத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, எம்ஜிஆர் நகரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளவரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையில், இரண்டு மகன்களை தாய் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கூட, ஆந்திராவில் தாய் தனது மூன்று குழந்தைகளை மூச்சு திணறடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்ததால், அந்த பெண் தனது குழந்தைகளை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)