Tamil Nadu Assembly Elections 2026: கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உறுதி!
Tamilaga Vettri Kazhagam: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். கொள்கை மற்றும் அரசியல் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை TVK தலைவர் விஜய் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, மே 15: தமிழ்நாட்டில் அடுத்த 2026ம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam) தனது மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக பார்க்கப்படும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததாக அறிவித்தது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் அடுத்ததாக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க இருக்கிறது என்பது தெரியவில்லை. அதேபோல், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் (Tamilaga Vettri Kazhagam) 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெளிவாக கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை:
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக இன்று அதாவது 2025 மே 15ம் தேதி தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் சட்டப் போராட்டத்தை நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் மக்களுக்காகவே எங்கள் தலைவர் விஜயின் நடவடிக்கைகள் தொடரும். ” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது.
தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தலைவர் @TVKVijayHQ அறிவிப்பார்.
~ TVK Deputy Secretary General CTR Nirmal Kumar @CTR_Nirmalkumar pic.twitter.com/e5xKvvOmyT
— TVK Vijay Trends (@TVKVijayTrends) May 15, 2025
அப்போது செய்தியாளர்கள் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “ தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற முடிவை எங்கள் தலைவரே முடிவு செய்வார். எங்கள் கொள்கை எதிரிகள் யார் என்பதை இதற்குமுன்பே தெளிவாக சொல்லிவிட்டோம். கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலஙக்ள் உள்ளது. அப்போது எங்கள் தலைவர் தேவையான நேரத்தில் அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே எங்களது கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை தெளிவாக தவெக தலைவர் விஜய் கூறிவிட்டார். அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது 100 சதவீதம் உறுதியானது. அதில், எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றார்.