கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. சடலம் மீட்பு!
Krishnagiri Murder : கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் சிறுவனின் உடலை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். சிறுவன் காணாமல் போனதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாதிரிப்படம்
கிருஷ்ணகிரி, ஜூலை 03 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை கடத்திச் சென்ற நிலையில், 2025 ஜூலை 3ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவன் கொல்லப்பட்டததை கண்டித்து, உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 13 வயதில் ரோகித் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் ரோகித் 2025 ஜூலை 2ஆம் தேதி காணாமல் போகியுள்ளார். இதனால், பதறிய பெற்றோர், அக்கம் பக்கத்தில் சிறுவன் ரோகித்தை தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
மேலும், சிறுவன் காணாமல் போனது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளதாக தெரிகிறது. இதில், சிறுவன் கடத்தி செல்லப்பட்டது கூறப்பட்டது. இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோர் 2025 ஜூலை 2ஆம் தேதியான நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
ஆனால், புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததாக தெரிகிறது. இதனால், சிறுவனின் உறவினர்கள், குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர. இதனை அடுத்து, 2025 ஜூலை 3ஆம் தேதியான இன்று காலை சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அஞ்செட்டி பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சிறுவன் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காரில் கடத்தி சென்றவர்கள் யார்? கொலை செய்தது யார்? காரணம் என்ன என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், சிறுவனின் உயிரிழப்பு நீதி கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டம்
மேலும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரியும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டாக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சிறுவன் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார், போலீசார் தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நாள்தோறும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.