T20 World Cup 2026: இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் யாரை எதிர்கொள்ளும்? உறுதியான எதிரணி..
T20 World Cup 2026 Semi Finals: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே இது 'வாழ்வா-சாவா' போராட்டமாகும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். தற்போது இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2026) தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றில் குரூப்-1 பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா (South Africa) ஏற்கனவே தனது அரையிறுதி இடத்தை உறுதி செய்துவிட்டது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு, வலுவான நிகர ரன் ரேட்டையும் (NRR) கொண்டுள்ளது. இப்போது இந்தப் பிரிவிலிருந்து இரண்டாவது அரையிறுதி அணியைத் தீர்மானிக்கும் போட்டி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே மார்ச் 1ம் தேதி (நாளை) கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: IndvsWI: வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் – கவாஸ்கர் கடும் எச்சரிக்கை
இந்திய அணிக்கு வெற்றி கட்டாயம்:
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே இது ‘வாழ்வா-சாவா’ போராட்டமாகும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். தற்போது இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதே எண்ணிக்கையிலான புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகளும் களம் இறங்குகிறது. இந்தியா எந்த வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தினாலும், 4 புள்ளிகளுடன் குரூப்-1 பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். மறுபுறம், மேற்கிந்திய தீவுகளுக்கும் வெற்றி அவசியம், ஏனெனில் தோல்வியடைந்தால் அவர்களின் உலகக்கோப்பை பயணம் இத்துடன் முடிவுக்கு வரும். இதனால் இப்போட்டி ஒரு காலிறுதிப் போட்டி போலவே மாறியுள்ளது.
அரையிறுதியில் மோதப்போவது யாருடன்?
தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால் யாரை எதிர்கொள்ளும் என்பதுதான். ஐசிசி விதிகளின்படி, குரூப்-1 பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணி, குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோத வேண்டும். குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து அணி இதுவரை அபாரமாக விளையாடி வருகிறது. அவர்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை உறுதி செய்துள்ளனர். எனவே, இந்தியா குரூப்-1-லிருந்து இரண்டாவது அணியாகத் தகுதி பெற்றால், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 26 ரன்கள்.. விசித்திரமான நோ-பால்.. ரசிகர்களைக் கடுப்பேற்றிய துபே!
மும்பையில் அரையிறுதிப் போட்டி:
இந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டி மார்ச் 5-ம் தேதி மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெறும். சொந்த மண்ணில் இங்கிலாந்து போன்ற வலுவான அணியை எதிர்கொள்வது இந்தியாவிற்கு மிக முக்கியமான சவாலாக இருக்கும். இதற்கு முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியிலும் இவ்விரு அணிகளும் மோதின. அப்போது இங்கிலாந்து வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை இரு அணிகளும் மோதினால், அந்தத் தோல்விக்கு பழிவாங்க இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.