T20 WC Super 8: தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. மீண்டெழுவாரா அபிஷேக் சர்மா?
T20 World Cup Super-8: பேட்டிங்கைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் மட்டுமே சிறப்பான ஃபார்மில் உள்ளார். திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடும் முறையைக் கையாண்டு வருகின்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஜோடி இந்தியாவிற்குப் பெரும் பலமாக உள்ளது.

அபிஷேக் சர்மா
அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை (India vs South Africa) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் மற்றும் அணியின் பீல்டிங் குறைபாடுகள் ஆகியவை உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய பிறகும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இன்னும் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. போட்டிக்கு முன்பு அபாரமான ஃபார்மில் இருந்த இடது கை தொடக்க வீரரான அவர், தனது முதல் மூன்று போட்டிகளிலும் டக்-அவுட்களைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: India vs South Africa: வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இந்தியாவின் X Factor வீரர்கள்!!
அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாக சூர்யகுமார்:
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ‘கோல்டன் டக்’ (முதல் பந்திலேயே அவுட்) ஆன அவர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளிலும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் மூன்றே பந்துகளில் டக்-அவுட் ஆனார். இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து (hat-trick of ducks) அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். எனினும், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். “அபிஷேக்கின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், அவர் ரன் குவிக்கத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்” என்று சூர்யகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்:
லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், பீல்டிங்கில் இந்தியா சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இந்திய வீரர்கள் 9 கேட்சுகளைத் தவறவிட்டுள்ளனர். இது தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகளில் இரண்டாவது அதிகபட்சமாகும்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் மட்டுமே சிறப்பான ஃபார்மில் உள்ளார். திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடும் முறையைக் கையாண்டு வருகின்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஜோடி இந்தியாவிற்குப் பெரும் பலமாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் நிலை:
மறுபுறம், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் குரூப் ‘டி’-யில் நான்கு வெற்றிகளுடன் தோல்வி பெறாத அணியாக சூப்பர் 8-க்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் குயின்டன் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, அதற்குப் பழிதீர்க்கும் முனைப்புடன் இப்போட்டியில் களம் காணும்.
இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..
நேருக்கு நேர் மோதல்:
டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இதுவரை 35 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 21 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றிலும் இந்தியா 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.