76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா – அசத்தல் வெற்றி
T20 World Cup : டி2 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியதே இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 4 ஓவர்களுக்குள் 3 முக்கிய வெக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி தடுமாறியது. இந்த நிலையில் 4வது விக்கெட்டுகளுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் டிவால்ட் பிரெவிஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பும்ரா அசத்தல் பந்துவீச்சு
போட்டி தொடங்கிய சில ஓவர்களிலேயே பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்காவை திணறடித்தார். குவிண்டன் டி காக் (6), ரியான் ரிக்கெல்டன் (7) என அந்த அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக முதல் 4 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்காவை 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. மொத்தம் 4 ஓவர்கள் வீசிய பும்ரா வெறும் 15 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக அவர் வீசிய 24 பந்துகளில் 12 டாட் பந்துகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : IND vs SA: இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டியில் மழை குறுக்கிடுமா? வானிலை நிலவரம் என்ன சொல்லுது?
ஆரம்ப கட்ட அதிர்ச்சிக்கு பிறகு அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான டேவிட் மில்லர் மற்றும் இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியை சரிிலிருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு வெறும் 51 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரெவிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அடித்து அவுட்டானார். தொடர்ந்து மில்லர் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்.
குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் சுழல் இன்று எடுபடவில்லை. டேவிட் மில்லர் மற்றும் பிரெவிஸ் சேர்ந்து அவரது பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு ரன்ரேட்டை உயர்த்தினர். இதனால் அந்த அணி 200 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் அந்த அணியால் 187 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதிகட்டத்தில் ஆறுதலளித்த துபே
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ரன்கள் ஏதும் எடுக்காமலும், திலக் வர்மா 1 ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் அந்த நம்பிக்கையும் வெகு நேரம் நீடிக்கவில்லை.
இதையும் படிக்க : மழையால் அனைத்து சூப்பர்-8 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
இந்தப் போட்டியில் சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் சிவம் துபே மட்டும் அவ்வப்போது சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு ஆதரவளித்தார். 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என 37 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பவே இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது.