IPL 2025: ஆறுதல் வெற்றியை நோக்கி ஹைதராபாத்.. அதிரடியை தொடருமா பெங்களூரு..? பிளேயிங் லெவன் எப்படி?
RCB vs SRH: ஐபிஎல் 2025ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள ஸ்டேடியத்தின் பிட்ச், ரன் அடிக்க கடினமானது. இரு அணிகளின் ஹெட்-டு-ஹெட், பிளேயிங் XI, மற்றும் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2025) இன்று அதாவது 2025 மே 23ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக இந்த போட்டி பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், போட்டியை கருத்தில்கொண்டு லக்னோவிற்கு மாற்றப்பட்டது. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி தற்போது 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஐபிஎல் 2025 சீசனில் வெளியேற்றப்பட்ட 3வது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
பிட்ச் எப்படி..?
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரன் அடிக்க கடினமானது. இந்த மைதானத்தில் பெரிய ஷாட்களை அடிப்பது என்பதும் சவாலான ஒன்று. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் வெறும் 167 ரன்கள் என்றாலும், பனி காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 190 ரன்கள் வரை குவிக்கலாம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே இதுவரை 24 போட்டிகள் நடந்துள்ளன. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
வானிலை எப்படி..?
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டி, மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டது. இதன்காரணமாக, லக்னோவில் நடைபெறும் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம், யாஷ் தயாள்
இம்பேக்ட் வீரர்: சுயாஷ் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா
இம்பேக்ட் வீரர்: அதர்வா டெய்டே