Ind vs Eng Test Series Tour: மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் புஜாரா, ரஹானே.. சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா..?
India Test Squad 2025: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 மே 24 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஷமியின் உடல் தகுதியின்மை காரணமாக அவர் நீக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை (Ind vs Eng Test Series Tour) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 மே 24ம் தேதியான இன்று அறிவித்தது. ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இளம் வீரர் சுப்மன் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்காக 18 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீண்ட காலமாக பங்களித்த இந்த மூன்று வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
சேதேஷ்வர் புஜாரா – அஜிங்க்யா ரஹானே:
ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்திய அணி அனுபவம் இல்லாமல் தவிக்கப்போகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஓய்வு பெறாமல் இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இந்தியாவின் புதிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.
புஜாரா கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில், புஜாரா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 41 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு, புஜாரா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகி இருக்கிறார். அதே நேரத்தில், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அஜிங்க்யா ரஹானே இந்திய அணியில் இடம் பெறவில்லை.
புஜாராவின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை:
ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்கு பிறகு, இந்திய அணியின் சுவராக இருந்தவர் சேதேஷ்வர் புஜாரா. இவர் இந்திய அணிக்காக இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 7,195 ரன்கள் எடுத்துள்ளார்.
ரஹானேவின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை:
அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்காக இதுவரை 85 போட்டிகளில் விளையாட்டி 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 5,077 ரன்கள் எடுத்துள்ளார்.
முகமது ஷமிக்கு என்ன ஆனது..?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இடம் வழங்கப்படவில்லை. பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இதுகுறித்து தெரிவிக்கையில், “அதிகபட்ச ஓவர்கள் கொண்ட டெஸ்ட் வடிவத்தில் முகமது ஷமி பொருந்தவில்லை. ஷமியின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு தேர்வுக் குழுவிடம் தெரிவித்திருந்தது. முகமது ஷமி உடல் தகுதி இல்லாமல் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பணிச்சுமையை இப்போது சமாளிக்க முடியாது. அதன்படி, முகமது ஷமியின் உடலால் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழுத்தத்தைத் தாங்க முடியாது என்று மருத்துவக் குழு எங்களிடம் கூறியுள்ளது.” என்று தெரிவித்தார்.
முகமது ஷமி சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை:
முகமது ஷமி இந்திய அணிக்காக இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 ஃபோர் விக்கெட்டுகளும், 6 ஃபைவ் விக்கெட்டுகளும் 229 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.