Vastu Tips: வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தில் நல்ல தூக்கத்திற்கு தேவையான முக்கியமான தகவல்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக் கூடாது என வாஸ்து கூறுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என நம்பப்படுகிறது. எனவே சரியான திசை மற்றும் படுக்கையறை அமைப்பு நல்ல தூக்கத்திற்கு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரம் என்பது தனி மனித வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக இடம் பெற்றுள்ளது. நிலம் சார்ந்த வாஸ்துவானது நாம் ஓரிடத்தில் என்ன செய்ய வேண்டும், அந்த இடம் எப்படி இருக்க வேண்டும் என நம்முடைய ராசி மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பலருக்கும் தூங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. மாறி வரும் அன்றாட சமூக சூழல் தொடங்கி மன அழுத்தம், உணவுப் பழக்கம் என பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். இப்படியான நிலையில் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆன்மிக ரீதியாக வாஸ்துவில் சில தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தூக்கத்தின் முக்கியத்துவம்
பொதுவாக உடலின் செயல்பாட்டுக்கு மிக முக்கியமானது தூக்கமாகும். இது உடல் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமல்லாமல் மனது சம்பந்தப்பட்ட விஷயமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஒரு நல்ல தூக்கம் தான் அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். நூறு மடங்கு இருக்கும் நம்முடைய ஆற்றல் 300 மடங்காக செயல்பட வைக்கும் அளவுக்கு தூக்கத்திற்கு சக்தி உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வடக்கு திசை ஆகாது
இப்படியான நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் படுக்கை அறை என்பது மிக முக்கியமான விஷயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூங்குவதற்கு நாம் தவறான திசையை தேர்ந்தெடுப்பது நோய் மற்றும் எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இது உடல் மற்றும் மன ரீதியிலான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. வாஸ்துவின் படி வடக்கு பக்கம் நாம் தலை வைத்து படுக்கவே கூடாது. இது மிக மோசமான தூக்க நிலைக்கு வழிவகுக்கும்.
ஏன் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்கக்கூடாது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். மனித உடலானது ஒரு காந்தம் போல செயல்படும் நிலையில் தலை வட துருவமாக இருக்கும் பட்சத்தில் உடலின் வட துருவங்களும் பூமியும் ஒன்றையொன்று விரட்டி ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. பூமியின் வலுவான காந்தப்புலம் ஆற்றல் இழப்பு, மன அழுத்தம், உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
மேலும் இறந்தவர் உடலை தான் வடக்கு நோக்கி தலை வைத்தும் தெற்கு நோக்கி கால் இருப்பது போலவும் வைத்திருப்பார்கள். அதனால் அந்த திசையை தவிர்க்க நமக்கு சிறு வயதில் இருந்தே அறிவுறுத்தப்படுகிறது. வடக்கு நோக்கி தலை வைப்பது ஒருவரின் ஆயுட்காலத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. எனவே எப்போதும் சமமான நேர தூக்கத்தையும், சரியான திசையையும் உறுதி செய்து புத்துணர்ச்சியுடன் இருங்கள்.
(வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பாகாது)