Vastu Tips: வீட்டு தோட்டத்தில் மருதாணி மரம் வளர்க்கலாமா? – வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
மருதாணி, அதன் மங்களகரமான பயன்பாட்டிற்குப் புகழ் பெற்றிருந்தாலும், வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வளர்ப்பது அசுபம் எனக் கருதப்படுகிறது. இதனால் குடும்பத்தில் உடல்நலப் பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஆனால், வீட்டைச் சுற்றியுள்ள வெளிப்புறத்தில் வளர்த்தால் செல்வ வளம் பெருகும் எனவும் சொல்லப்படுகிறது.

மருதாணி மரம்
மருதாணி என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும். நாம் நம்முடைய வீட்டை அழகாக மாற்றுவதற்கு தோட்டம் வைத்து பராமரிக்கிறோம். அதில் ஏராளமான செடிகள் மற்றும் மரங்களை வைத்து அழகு பார்க்கிறோம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு தோட்டம் எப்படி இருக்க வேண்டும், அந்தத் தோட்டத்தில் என்ன மாதிரியான செடிகள், எந்த திசையில் அவை இருக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதேசமயம் சில செடிகளை வீட்டில் எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாது எனவும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மருதாணி மரம் வீட்டில் வளர்க்க கூடாத ஒரு தாவரமாக கருதப்படுகிறது. மருதாணி என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அதனை பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மருதாணி முதன்மை அழகு சாதன பொருளாக இருந்தாலும் அதன் செடியை வீட்டு தோட்டத்தில் வளர்ப்பது அசுபமானதாக கருதப்படுகிறது.
ஏன் மருதாணி செடி வளர்க்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டு தோட்டத்தில் மருதாணி மரம் நடுவது அசுபமாக பார்க்கப்படுகிறது. மருதாணியின் வாசனை அனைவரையும் கவர்வதாக இருந்தாலும் அது எதிர்மறை சக்திகள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. இதனை வீட்டில் வளர்த்தால் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் மருதாணி செடி வளர்க்கக்கூடாது என்பதற்கு சில காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி வீட்டில் மருதாணி மரம் இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொடர்ச்சியாக உடல் நலப் பிரச்சினைகள் உண்டாகும் என நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் இடையேயும், கணவன் மனைவிக்கு உள்ளாகவும் கருத்து வேறுபாடுகள் அதிகமாகி மன அமைதி பாதிக்கப்படும் சூழலும் உண்டாகும் என சொல்லப்படுகிறது. மேலும் வீட்டில் மருதாணி செடி இருப்பது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு வேலையிலும் தடைகளை உருவாக்கும், இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
வெளிப்புறத்தில் இருந்தால் பலன்கள்
அதேசமயம் உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் வெளிப்புற சாலையோர பொது இடத்தில் பார்வைக்கு தகுந்தவாறு மருதாணி செடி இருப்பது சில நன்மைகளை பயக்கும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி அத்தகைய மருதாணி செடியை பார்ப்பது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க காரணமாக அமையும் என நம்பப்படுகிறது. அதேபோல் எதிர்மறை ஆற்றலை நம் வீட்டை அடையாதவாறு தடுக்கக்கூடிய சக்தியும் மருதாணி மரத்துக்கு உள்ளது. அதனால் தோட்டத்தில் வைப்பதைக் காட்டிலும் வீட்டின் வெளிப்பக்க சாலை ஓரங்களில் நிறைய இடங்களில் மருதாணி வளர்க்கப்படும்.
மேலும் மருதாணியை மாதம் ஒருமுறை அரைத்து கைகளில் வைப்பதால் பாசிட்டிவான எண்ணங்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. வீட்டு வாசலில் மருதாணி மற்றும் வேப்பிலை சேர்த்து முன் பக்க கதவில் சொருகி வைத்தால் வீட்டில் இருந்த துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும் என நம்பப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரப்படி இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)