Vastu Tips: ப்ளீஸ்.. இரவில் இதெல்லாம் செய்யாதீங்க.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
இரவு நேரங்களில் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி தாமதமாக உணவு உண்ணுதல், வடக்கு திசையில் தலை வைத்து தூங்குதல், நகங்களை வெட்டுதல், மற்றும் இரவில் வீடு துடைத்தல் போன்றவை வாஸ்து சாஸ்திரப்படி அசுபமானவை. இவற்றைத் தவிர்த்தால் நல்ல ஆரோக்கியம், நிம்மதி, மற்றும் செல்வ வளர்ச்சி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
தனிமனித வாழ்க்கையில் ஜோதிட சாஸ்திரங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதைபோலவே வாஸ்து சாஸ்திரமும் இன்றியமையாததாக உள்ளது. வாஸ்து என்பது நிலத்தை அடிப்படையாக கொண்டது என்பது நாம் அறிந்தது. அப்படியிருக்கையில் நமது வாழ்க்கை பெரும்பாலும் கட்டிடக்கலையைச் சார்ந்து தான் உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி நாம் குடியிருக்கும் வீட்டின் அமைப்பு, அதன் திசைகள் மற்றும் நாம் செய்யும் அனைத்து விஷயங்களும் மங்களகரமானதாக இருக்க வேண்டும் என நினைப்போம். அதில் நாம் வாழ்க்கையில் எந்த காலத்திலும், எந்த இடத்திலும் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பின்பற்றி நடக்கும்போது வாழ்க்கையில் நிச்சயம் வளர்ச்சியைக் காணலாம் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் நாம் இரவு நேரத்தில் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். இவற்றைச் செய்தால், வாழ்க்கையில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வில் பல பிரச்சனைகளை உண்டாக்கும் என சொல்லப்பட்டுள்ளது. காரணம் இரவில் செய்யப்படும் செயல்கள் மிகவும் அசுபமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
தாமதமாக சாப்பிடுவது: இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் இரவில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதல்ல என சொல்லப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இரவு 8 மணிக்குப் பிறகு சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இது நாம் சக்தியை இழக்க காரணமாக அமைகிறது. இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உணவு சரியாக ஜீரணமாகாமல் உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். ஆகவே இரவில் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
தவறாக தூங்குவது: பலருக்கும் தூங்கினால்போதும் என எந்த திசை, என்ன அறை, எப்படி படுக்க வேண்டும் என்பது பற்றி கவலைப்படாமல் தூங்குவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி இரவில் தூங்கும் போது வடக்கு திசையில் தலை வைக்கக் கூடாது. இதனால் எதிர்மறையான விளைவுகள் உண்டாகலாம். இவ்வாறு தூங்குவது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. கெட்ட கனவுகள், சரியான தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இதன் காரணமாக உண்டாகலாம். இதனால் ஒருவர் ஆற்றலானது குறையும் என நம்பப்படுகிறது.
நகம் வெட்டுதல்: பலருக்கும் இரவில் நகம், முடி வெட்டும் பழக்கம் உள்ளது. இது வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் மோசமான காரியமாக குறிப்பிடப்படுகிறது. இது வறுமைக்கு வழிவகுக்கிறது என சொல்லப்பட்டுள்ளது. இரவில் நகங்களை வெட்டுபவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்காது என்றும், அவர்கள் மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நம்பப்படுகிறது. எனவே இரவில் இவற்றைச் செய்யாதீர்கள்.
வீடு துடைத்தல்: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டைத் துடைப்பது, சுத்தம் செய்வது போன்றவை வாஸ்து சாஸ்திரத்தில் அசுபமாகக் கருதப்படுகிறது. துடைப்பத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக நம்பப்படுகிறது. மாலையில் வீட்டைத் துடைக்கும்போது லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறுவதாக நம்பப்படுகிறது. இது செல்வ இழப்புக்கு வழிவகுக்கும். ஆகவே வீட்டை சுத்தம் செய்வதும் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும்.
(வாஸ்து மற்றும் ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)