வாழ்க்கையில் இந்த 5 பேரிடம் கவனமாக இருங்கள்.. இல்லாவிட்டால் அவ்வளவு தான்!

சாணக்கிய நீதியின்படி, பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க 'இல்லை' என்று சொல்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்கு இணங்காமல், நமது வரம்புகளைப் புரிந்துகொண்டு இல்லை என மறுப்பதன் மூலம் நம்மை பல பிரச்னைகளில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் இந்த 5 பேரிடம் கவனமாக இருங்கள்.. இல்லாவிட்டால் அவ்வளவு தான்!

சாணக்கிய நீதி

Published: 

22 May 2025 12:08 PM

இன்பம், துன்பம் நிறைந்த வாழ்க்கையில் நாம் சில விஷயங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டிருப்போம். எல்லோருக்குள்ளும் உதவி செய்யும் குணம், அடுத்தவர்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் பழக்கம் உள்ளிட்டவை இருக்கும். அதேபோல் தான் எந்த விஷயம் என யார் வந்து நின்றாலும் பலருக்கும் வாயில் இருந்து இல்லை என்ற வார்த்தை வராது. அது பணமோ, பொருளோ, வேறு எதுவும் உதவியோ என்றாலும் சரி என சொல்லியே பழக்கப்பட்டிருப்போம். ஆனால் ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பிரச்சனைகளைத் தவிர்க்க ‘இல்லை’ என்று சொல்வது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். ஒரு விஷயத்தை நிறைவேற்றத் தவறுவதை விட இல்லை என்று சொல்வது பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் என அவர் கூறுகிறார். முதலிலேயே இல்லை என மறுப்பது நேர்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் சாணக்கியரின் கொள்கைகளின்படி, எப்போது ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும் என்பது பற்றி காணலாம்.

இந்த 5 வகையான நபர்களிடம் கவனமாக இருங்கள்

  1. உங்களுடைய வாழ்க்கையில் ஏமாற்றுபவர்கள் யார் என்பது உங்களுக்கு ஒரு சூழலில் தெரிய வரும். அத்தகைய நபர்கள் உங்களிடம் ஒன்றைச் சொல்கிறார்கள். பின்னால் இன்னொன்றைச் செய்வார்கள். அப்படியாக உங்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் வெளியில் உங்கள் நலம் விரும்பிகளாக இருக்கும்படி நடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் பழகும்போது தெளிவான எல்லைகளை அமைக்க வேண்டும். இத்தகைய குணம் கொண்ட ஒருவர் ஏதாவது சொன்னால் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக இல்லை என்று சொல்வது சிறந்தது.
  2. நாம் சில நேரங்களில் மற்றவர்களுக்கு அதை செய்கிறேன், இதை பண்ணுகிறேன் என சொல்லி அதிகப்படியான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அவற்றை நிறைவேற்றத் தவறுவது உங்கள் பிம்பத்தை சேதப்படுத்தும் செயலாகும். இது மன அழுத்தத்திற்கும், குற்ற உணர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஒருவேளை அந்த செயல்உங்கள் திறமைக்கு அப்பாற்பட்டது, அதை நம்மால் நிறைவேற்ற முடியாது என்றும் உணர்ந்தால், முன்கூட்டியே மறுப்பது நல்ல செயலாகும்.
  3. சில நேரங்களில் எதிர் நபர் உங்களை மிகவும் தொந்தரவு செய்யும் சூழ்நிலைகளுக்கு ஆளாகும் நிலை இருக்கும். அதேசமயம் நீங்கள் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் அவமானமாக நடத்துவார்கள். இந்த இடத்தில் உங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்க இல்லை என்று சொல்வது சரியான செயலாகும். ஒரு விஷயம் உங்கள் வரம்புகள் இருக்கிறது என தெரிந்தால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நேரத்தை, சக்தியை மிச்சப்படுத்துவதற்கான வழியைப் பாருங்கள்.
  4. நேர்மையான விஷயத்திற்கு கடன் வாங்குபவர்கள் தாங்கள் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் உங்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். அதேசமயம் நேர்மையற்றவர்கள் வெவ்வேறு காரணத்தைச் சொல்லி நேரத்தை வீணடிப்பார்கள். கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்க நம்மை பார்ப்பதை கூட தவிர்ப்பார்கள். இது போன்ற ஒருவர் கடன் கேட்கும்போது நீங்கள் இல்லை என்று சொல்லி விட்டால் பணத்தையும் மன அமைதியையும் இழப்பது தடுக்கப்படும்.
  5. சிலர் உங்களை தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒருவராகக் கருதுவார்கள். இப்படிப்பட்டவர்களை பெருமையாக நினைத்து அதனை உங்கள் பிரச்சினைகளாகக் கருதுவதை நிறுத்துங்கள். உங்களை உயர்ந்தவர்களாக உணர வைக்கும் நபர்களுடன் இருக்க பழகுங்கள். யாராவது உங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டாலும், உங்களின் நல்ல நோக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டாலும் அவர்கள் உறவே வேண்டாம் என இருங்கள்.

(சாணக்கிய நீதிப்படி சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் தகவல்களாக இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)