Narasimha Jayanthi 2025: நரசிம்ம ஜெயந்தி அன்று இதெல்லாம் கண்டிப்பாக செய்யாதீங்க!
2025 ஆம் ஆண்டு மே 11 அன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தீமையை வென்ற நன்னாளாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, பூஜைகள் செய்கின்றனர். நரசிம்மரை வழிபடும் போது, மனதில் நேர்மறையான எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக ஆன்மிக வரலாற்றில் திருமால் 10 அவதாரங்கள் எடுத்து பகைவர்களை அழித்தார் என்பது உள்ளது. இதில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம் தோன்றிய நாள் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் விஷ்ணுவின் கடுமையான வடிவமாகும். பார்ப்பதற்கே நமக்கே ஒரு பயத்தை உண்டாக்கினாலும் இந்த அவதாரம் தன்னை நம்பி வழிபடும் பக்தர்களுக்கு சாந்த சொரூபமானது. சிங்கத்தின் தலை மற்றும் நகங்கள், மனித உடல் கொண்ட இந்த நரசிம்மர் அவதரித்த இந்த மகிமையான நாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தசியில் வருகிறது.
2025 ஆம் ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 11 ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சதுர்த்தசி திதி 2025, மே 10 அன்று மாலை 5:29 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து மே 11 அன்று இரவு 9:19 மணிக்கு முடிவடைகிறது. சூரிய உதயத்தை கணக்கிடும்போது நரசிம்ம ஜெயந்தி மே 11 ஆம் தேதி கொண்டாடப்படும்.
அவர் அவதரித்த இந்நாள் தீமையை நன்மை வென்ற தினமாக பார்க்கப்படுகிறது. தன்னுடைய பக்தனான பிரகலாதனை அவனது தந்தையான இரணியனிடம் இருந்து காப்பாற்ற தூணில் இருந்து வெளிப்பட்டு அவனைக் கொன்றான் என வரலாறு உள்ளது. இந்தியா முழுவதும் நரசிம்மருக்கு என கோயில்களில் தனி சன்னதிகளும், தனிக் கோயில்களும் உள்ளது. இந்த நரசிம்ம ஜெயந்தி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, பூஜைகள் செய்து, நரசிம்ம பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற்று வருகிறார்கள்.
அப்படி நாம் வழிபடும் போது சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த விதிகளை மீறினால் நரசிம்ம சுவாமி கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், தவறிழைப்பவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?
இந்த புனிதமான நாளில் நாம் யார் மனதையும் புண்படுத்தும்படி நடக்கக்கூடாது. கடுமையான சொற்கள் பேசக்கூடாது. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலும் நரசிம்மர் பெயரை உச்சரித்தால் காணாமல் போய்விடும். நேர்மறையான எண்ணங்களுடன் இந்த உலகின் அனைத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும். நரசிம்மர் இயல்பிலேயே கோபக்காரராக தோற்றமளித்தாலும் உண்மையில் அமைதி மற்றும் ஆழமான பக்தி ஆகியவற்றை தான் விரும்புகிறார்.
நரசிம்ம ஜெயந்தி நாளில் மாமிசம் உனவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல் மது அருந்தக்கூடாது. மது, பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சமையலில் சேர்க்க வேண்டாம். இந்த நாள் நரசிம்மருக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே மன மற்றும் உடல் தூய்மையைப் பேணுவது மிகவும் முக்கியம். அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் யாரையும் அவமதிக்காதீர்கள்.
அதுமட்டுமல்லாமல் நரசிம்ம ஜெயந்தி அன்று கருப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணியக்கூடாது. இந்த நாளில் மஞ்சள், சிவப்பு அல்லது காவி நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிறம் நேர்மறை ஆற்றலை குறிக்கிறது. நரசிம்ம ஜெயந்தி அன்று பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)