Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியா.. இன்று அனத்து கட்சி கூட்டம்!
All Party Meeting on Operation Sindoor | பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே 08 : பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) இந்திய அரசு கையில் எடுத்துள்ள நிலையில், அது குறித்து இன்று (மே 08, 2025) டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சிந்தூர் ஆபரேஷன் தாக்குதல் காரணமாக உலக நாடுகளின் கவனம் இந்தியா – பாகிஸ்தான் மீது திரும்பியுள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
உலகையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – 26 பேர் பரிதாப பலி
ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட மொத்தமாக 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கடும் கோபத்திற்கு உள்ளானது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்ற நிலையில் ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக அட்டாரி- வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் மே 6, 2025 முதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உட்பட சுமார் 70 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இதற்கு இடையே இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியர்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.
கிரண் ரிஜிஜூ எக்ஸ் பதிவு
Govt has called an All Party leaders meeting at 11 am on 8th May, 2025 at Committee Room: G-074, in the Parliament Library Building, Parliament Complex in New Delhi. https://t.co/1hcBepMReC
— Kiren Rijiju (@KirenRijiju) May 7, 2025
இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்
ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் உலக நாடுகள் சில இந்தியா சற்று அமைதி காக்க வேண்டும் என்பதை போல கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று ( மே 08, 2025) நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள நூலக அறையில் காலை 11 மணி அளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.