மீனாட்சி திருக்கல்யாணம்.. வீட்டிலேயே மாங்கல்யம் மாற்ற வழிமுறைகள்!
மதுரை சித்திரை திருவிழா, சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணக்கத்தை வெளிப்படுத்தும் 20 நாள் கொண்டாட்டமாகும். 2025-ல் ஏப்ரல் 29 அன்று விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8 அன்று நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தின் போது தாலி மாற்றுதல், வழிபாடு போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றிக் காணலாம்.

மதுரை சித்திரை திருவிழா சைவம் மற்றும் வைணவம் சமயத்தின் நல்லிணக்கத்தை பசைச்சாற்றும் வகையில் 20 நாட்கள் கொண்டாடப்படும் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவாகும். இந்த சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இருக்கும். இந்த காலகட்டத்தில் மதுரை மாவட்டமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். மதுரையைச் சேர்ந்த வெளியூரில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் சித்திரை திருவிழா காண சொந்த ஊருக்கு படையெடுப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதன்படி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2025 மே 8ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழா
மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவில் 2025 மே 6ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயம் மேற்கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். மே 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும், மே 9ம் தேதி திருத்தேரோட்டமும், மே 10ம் தேதி கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்படும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து மே 11ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், 12ம்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் மகாலட்சுமி அவதரித்த நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள், கர்ம வினைகள் நீங்க வழிபடுபவர்கள் இந்த நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டு சிறப்பாக பார்க்கப்படுகிறது. திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் திருமணம் ஆகாத மற்றும் திருமணமான பெண்கள் தங்களது இல்லற வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.
இந்த திருக்கல்யாண வைபவத்தின் போது நாம் மீனாட்சியம்மன் இடம் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அடுத்த முறை தரிசிப்பதற்குள் அவை நடந்தேறும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த திருக்கல்யாண நிகழ்வின் போது திருமணமான பெண்கள் தாலி கயிறு மாற்றுவது நடைபெறுகிறது.
வீட்டில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
அவ்வாறு செய்ய நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி தங்களது பழைய தாலிக் கயிறில் இருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை புதிய கயிறில் கோர்க்க வேண்டும். இதன் பிறகு மீனாட்சியம்மன் புகைப்படத்தின் முன் அதனை வைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் நேரலை மூலமாக பார்க்கிறார்கள்.
கோயிலுக்கு வருபவர்கள் கையில் வரும் போது தாலி கயிரை கொண்டு வந்து திருக்கல்யாணம் முடிந்தவுடன் மாற்றிக் கொள்ளலாம். வீட்டில் மாற்றுபவர்கள் சரியாக நேரலையில் தாலி கட்டும் வைபவம் நடந்தேறியவுடன் தங்களது கணவரை திருமாங்கல்யத்தை கட்ட சொல்லலாம்.
ஒருவேளை சூழல் காரணமாக கணவர் வெளியில் சென்று இருந்தால் நீங்களே தாராளமாக தாலி கயிறு மாற்றிக் கொள்ளலாம். மீனாட்சியின் அனுக்கிரகம் அனைவருக்கும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உங்களது இல்லறத்தில் நிலவிய குழப்பங்கள் துன்பங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கி இன்பம் பிறக்கும்.
தாலிக்கயிறு மாற்றியவுடன் மீனாட்சி அம்மன் புகைப்படத்தின் முன் ஏதேனும் இனிப்பு ஒன்றை பிரசாதமாக வைத்து வழிபட வேண்டும். பின்னர் அதனை பகிர்ந்து உண்டு ஏதேனும் இருவருக்கு உணவு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)