அடுத்த 5 நாட்கள்… கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் ஒருசில இடத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, மே 08 : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. அதாவது, 2025 மார்ச் மாதம் முதலே வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது. அப்போது முதலே பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் , தற்போது அக்னி வெயில் இருப்பதால், வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கொட்டப்போகும் மழை
குறிப்பாக, திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கூட அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 மே 8ஆம் தேதியான இன்று முதல் 2025 மே 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெங்கு தெரியுமா?
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 8ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 2025 மே 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்ததில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
இருப்பினும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் பெரியளவில் இருக்காது என தெரிகிறது. அதுவும், 2025 மே 13ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. தமிழக்ததில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதால், வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.