Spiritual: ஃப்ரிட்ஜில் வைத்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
வழிபாட்டில் பூக்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதை பற்றிப் பார்க்கலாம். துளசி, வில்வ இலை, தாமரை போன்றவற்றை ஒரு வாரம் வரை, மற்ற பூக்களை வெள்ளைத் துணியில் மூன்று நாட்கள் அல்லது வெள்ளி/செம்பு பாத்திரத்தில் ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது.

கடவுள் வழிபாடு
இறை வழிபாடு என்பது அனைத்து மதத்திலும் உள்ளது. அதேபோல் இந்த உலகில் படைக்கப்படும் மனிதர்கள் தொடங்கி தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் கடவுளுக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இறை வழிபாட்டில் பூக்கள் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிலர் பூக்களை வாங்கி வீட்டில் குளிர்சாதப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களை நாம் எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பது குறித்து காணலாம். மல்லி, சாமந்தி, ரோஜா, துளசி, வில்வ இலை என அனைத்து விதமான பூக்களுமே இறை வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது இறை வழிபாட்டில் வைக்க வாங்கப்படும் துளசி, வில்வ இலை மற்றும் தாமரை பூக்களை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். மற்ற பூக்களை ஒரு வெள்ளை துணியில் மூன்று நாட்கள் அல்லது வெள்ளி/செம்பு பாத்திரத்தில் ஐந்து நாட்கள் வரை வைக்கலாம். எக்காரணம் கொண்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பூக்கள் பூஜைக்கு ஏற்றவை அல்ல என்பதை உணர வேண்டும்.
பொதுவாக, நாம் வீட்டில் வளர்க்கும் செடிகளிலிருந்தோ அல்லது சந்தையிலிருந்தோ பூக்களை பூஜைக்காகக் கொண்டு வருகிறோம். பூக்கள் செடியில் இருந்து பறிக்கப்பட்டது முதலே அதன் விதி முடிவடைகிறது என்பது அர்த்தமாகும். அதனை விரைவில் கடவுள் பாதத்தில் சரணடைய செய்ய வேண்டும். ஆனால் செடியில் இருந்து பறிக்கப்படும் அனைத்து பூக்களும் கடவுளுக்கு செல்வதா என கேட்டால் இல்லை. சுப நிகழ்ச்சிகள், அசுப நிகழ்ச்சிகள் என எங்கும் பூக்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் பூக்கள்
அதேசமயம் இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வந்து விட்டது. இதனால் இரண்டு, மூன்று நாட்களுக்கு தேவையான பூக்களை வாங்கி வைக்கிறார்கள். இப்படியாக ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் பூக்களை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாம். கடவுள் வழிபாட்டில் வைக்கக்கூடாது. ஆனால் வீட்டில் வைக்கப்படும் பூக்கள், வெள்ளைத் துணியில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, சுத்தமாகவும் காய்ந்து போகாமலும் இருக்க வேண்டும். இப்படியான வைக்கப்படும் பூக்களை மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
வெளியில் தினமும் வாங்கும் பூக்களை விற்பவர்கள் சில நேரங்களில் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாளும் விற்பனை செய்கிறார்களே என்ற கேள்வி எழலாம். நாம் ஒரு விஷயத்தை மனதார தவறு என தெரிந்து செய்யக்கூடாது அவ்வளவு தான். விற்பனையில் சில ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், கடவுளுக்கு நாம் செலுத்துவது சரியான விஷயங்கள் தான் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். உலர்ந்த வில்வ இலைகள் அல்லது துளசியையும் வழிபாட்டிற்கு வழங்கலாம்.
மற்ற பூக்களை வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் வைத்திருந்தால் ஐந்து நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். சில பழங்கால கோயில்களில், ஒரு வாரம் மூங்கில் தட்டில் வைக்கப்பட்ட பூக்களைப் பயன்படுத்துவது ஒரு வழக்கம். ஒட்டுமொத்தமாக, பூக்களை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் சரியான நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது முக்கியம். அதேபோல் காய்ந்த பூக்கள் பூஜையறையில் இருந்தால் அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(இறை நம்பிக்கை மற்றும் ஆன்மிக வழிபாட்டில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)