வீட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் என்ன?
Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நம்முடைய வீடுகளில் நாம் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபட்டிருப்போம். இந்த சிலைகளை நாம் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால் சிலரால் அங்கு செல்ல முடியாது. அவர்கள் வீட்டில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி கரைக்கலாம்.

விநாயகர் சிலைகள் கரைப்பு
முழு முதற்கடவுளான விநாயகர் தோன்றிய தினம் விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திரும்பும் திசையெங்கும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுவது வழக்கம். அதேசமயம் வீடுகளிலும் களிமண்ணால் ஆன சிலைகள் வாங்கி நாம் பிரதிஷ்டை செய்து வழிபடுவோம். இப்படியான நிலையில் இந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அது சிலை பிரதிஷ்டை செய்த நாளில் இருந்து 3, 5, 7,9, 11 என ஒற்றைப்படை நாளாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் வீட்டின் அருகில் எப்படிப்பட்ட நீர் நிலைகளாக இருந்தாலும் கரைக்கலாம். அதேசமயம் சிலரால் வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்டாலும் நீர் நிலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் யார் மூலமாவது சிலைகளைக் கொடுத்து விடுவார்கள். ஆனால் சாஸ்திரத்தில் வீட்டிலேயே சிலைகள் கரைப்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது வழிபாடு முழு மன நிறைவோடு இருக்கும் என சொல்லப்படுகிறது.
நீர் நிலைகளில் கரைப்பதன் பின்னணி
நாம் இத்தகைய விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என கூறப்படுகிறது. நம் வாழ்க்கை பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையது என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிரூபணமாகிறது. அந்த வகையில் இறந்தவர்களில் புதைக்கப்பட்டவர்களின் உடல் மண்ணுடன் கலந்து விடுகிறது.
அதேசமயம் உடல் எரியூட்டப்படும்போது உருவாகும் சாம்பலானது நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதைப்போலவே பூஜை முடிந்தவுடன், விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றது. இதில் உள்ள களிமண் நீரின் அடியில் படிந்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. நீர் நிலைகளின் தரமும் உயர்கிறது.
Also Read: விநாயகர் விரதத்துக்கு இவ்வளவு பலன்களா?
வீட்டில் கரைப்பதன் வழிமுறைகள்
நீங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நாளில் நல்ல நேரம் குறித்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளித்து சுத்தமான ஆடை அணிந்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும். காலை வழிபாடு முடிந்தவுடன் அதனை நீங்கள் ஒரு வாளியில் உள்ள தண்ணீரில் கரைக்க தொடங்கலாம். அதற்கு முன் விநாயகருக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரம், பூ உள்ளிட்ட பொருட்களை அகற்றி விட வேண்டும். பின்னர் விநாயகர் சிலையை நீரில் மூழ்கடிக்க செய்யும் போது அவருக்கான மந்திரம், பாடல்களை உச்சரிக்கலாம். முழுவதுமாக சிலை நீரில் கரைந்த பிறகு அந்த நீரை காலடி படாத இடம், தோட்டம், மரங்களின் வேர்களில் ஊற்றலாம். களிமண்ணை தோட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சுற்றுச்சூழல் மேம்படும் என நம்பப்படுகிறது.
Also Read: மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு
அதேசமயம் பூஜையறையில் விநாயகர் சிலை பிரதிஷ்டையின் போது பயன்படுத்தப்பட்ட பிற பொருட்களை தீயிட்டு எரிக்காமல் உரிய வழிமுறைகளுடன் அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.