வாட்டர் பாட்டில் மட்டுமல்ல… இந்த பொருட்களையும் தியேட்டருக்குள் எடுத்து செல்லலாம்!
Permitted Items in Theatres : எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்தாலும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது தான் மக்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்த நிலையில் திரையரங்குகளுக்கு செல்லும் போது, நீங்கள் என்னென்ன பொருட்களை சட்டப்படி எடுத்துச்செல்லலாம் என்பது பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

இப்போது ஸ்மார்ட்போனிலேயே (Smartphone) நாம் விரும்பும் படங்களைப் பார்க்கலாம். அல்லது வீட்டிலேயே எல்இடி திரையில் ஹோம் தியேட்டர் வசதியுடன் திரைப்படங்களை குடும்பத்துடன் கண்டு மகிழலாம். இருந்தபோதிலும் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்கும் அனுபம் போல வேறு எதிலும் கிடைக்காது. அதனால் தான்திரையரங்குகள் (Theatre) இன்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன, ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் இந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களை ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு படம் பார்க்கப் போகும்போது, அடிக்கடி மனதில் எழும் ஒரே கேள்வி என்னவென்றால், திரையரங்கிற்குள் என்ன பொருட்களை எடுத்து செல்லலாம் என்பதாகத் தான் இருக்கும்.
தண்ணீர் எடுத்துச் செல்ல முடியுமா?
திரையரங்கிற்குள் தண்ணீர் பாட்டில் வீட்டில் இருந்து எடுத்து செல்லலாமா என்ற கேள்வி இருக்கும். ஆனால் திரையரங்குகளில் நாம் வெளியே இருந்து எடுத்து செல்லும் தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி உண்டு. குடிநீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை, எனவே நீங்கள் திரையரங்கிற்கு உங்கள் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லலாம். யாராவது உங்களுக்கு இடையூறு செய்தால், நீங்கள் நிர்வாகத்திடம் அதுகுறித்து புகார் அளிக்கலாம்.
இதையும் படிக்க : முகத்துக்கு மட்டுமல்ல… உடலில் எங்கெல்லாம் மறக்காமல் சன்ஸ்கிரீன் போடணும் தெரியுமா?




உணவுப்பொருட்களுக்கு கட்டுப்பாடு
ஆனால் நாம் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களை மட்டுமே நாம் உள்ளே எடுத்து செல்ல முடியும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு திரையரங்கில் விற்கப்படும் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளை எடுத்து செல்ல விரும்புவார்கள். ஆனால் அதனையும் மறுப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், திரையரங்கம் என்பது தனியாருக்குச் சொந்தமான இடம். அங்கு விதிகளை அமைக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்றும் தெளிவுபடுத்தியது. எனவே, திரையரங்க நிர்வாகம் உங்களை உள்ளே உணவு கொண்டு வருவதைத் தடை செய்யலாம். அதே நேரம் கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், முதியவர் அல்லது நோயாளியுடன் வரும் பார்வையாளர்களுக்கு தேவைக்கேற்ப சில உணவுப் பொருட்களைக் கொண்டு வரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் இதற்கும் கூட, திரையரங்க மேலாளரின் அனுமதி தேவை.
இதையும் படிக்க : நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? முதுகெலும்புக்கு ஆபத்து – எப்படி தவிர்ப்பது?
மேலும் இடைவேளையில் ஏதாவது சாப்பிட விரும்பினால், திரையரங்கில் கிடைக்கும் உணவுப் பொருட்களிலிருந்து எதையும் வாங்கலாம். ஆனால் எந்தப் பார்வையாளரையும் அதை வாங்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. நுகர்வோரின் இந்த உரிமையை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சுருக்கமாக சொல்வது என்றால்,
- நீங்கள் உங்கள் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லலாம்.
- சிற்றுண்டிகள் அல்லது பிற உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது.
- சிறப்புத் தேவைகள் உள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன.
- திரையரங்கில் விற்பனைக்கு பொருட்களை வாங்குவது விருப்பத்திற்குரியது, கட்டாயமானது அல்ல.